வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சகாவின் பயணக் குறிப்புகள்….


பகாடியாக்களை தேடி…..
மானுடவியல் துறையில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பழங்குடியினரின் வாழ்க்கை முறைப் பற்றி களஆய்வு செய்ய வேண்டும்.அது அந்தப் படிப்பிற்கு ஏதுவான விடயம் என்பதால் மானிடவியல் துறையில் அந்த களஆய்வு முதன்மையான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சென்னை பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறை மாணவர் என்ற வகையில் நானும் என்னுடன் பயிலும் மரியன் பிரசாத், அம்மு காயத்ரி, விபா ருக்மிணி, அசாங் ஆகியோர் ஏதாவது ஒரு பழங்குடியினரைப் தேடிப்போக முடிவு செய்தோம்.

இதற்கு முன் இத்துறையில் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் தென்மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்களையே இதுவரை களஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளனர். அதனால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகாடியா என்ற மக்களை சென்று பார்ப்போம் என்று நண்பன் மரியன் சொல்ல மற்றவர்கள் ஏற்றுக் கொண்டோம். அதற்கான ஏற்பாடுகளை அவரே செய்யத் தொடங்கினார்.

எங்களின் துறைத்தலைவர்(பொ) முனைவர் சுமதி அவர்கள் எங்களுக்கு பலமுறை எப்படி களஆய்வு செய்வது மக்களிடம் எப்படி அணுகுவது, யாரார் என்ன தலைப்பில் ஆய்வு செய்வது என்பது உள்ளிட்ட பலவற்றை அக்கறையோடு கற்றுக் கொடுத்தார்.

இறுதியாக காட்டுநிலம் என்ற பொருள்பட விளங்கும் ஜார்கண்ட் மாநிலத்தின் பக்கூர் மாவட்டத்தில் உள்ள ராஜ்மகல் என்ற மலைத்தொடரில் வசிக்கும் பகாடியா என்னும் பழங்குடியின மக்களின் வாழ்நிலையைப் பற்றி அறிந்துகொள்ளும் எங்களது களப்பணி கிட்டத்தட்ட 20நாட்கள் மேற்கொள்வது என்ற ஒப்புதலுடன் பயணத்திற்கு தயாரானோம்.
இந்த நாட்களில் என்னுடைய இதழ் பணி முற்றிலும் தடைபடும் என்கிற நிலையில், இந்தப் பயணத்தை மேற்கொள்வது மிக அவசியமான ஒன்றாகவே நான் கருதினேன். அதற்கான காரணம், வட மாநிலங்களுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம். அதுவுமில்லாமல் அந்த பயணம்கூட சுற்றுலா செல்வதுபோல் ஓரிரு நாள்கள் என்றில்லாமல் 20நாட்கள் சம்பந்தப்பட்ட மக்களுடனேயே தங்கியிருந்து மேற்கொள்ளும் களப்பணி, பல அனுபவங்களைப் பெற்றுத்தரும் என்பதுதான்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 21-ம் நாள் இரவு சென்னையில் இருந்து ஹவுரா (கொல்கத்தா) செல்லும் ஹவுரா விரைவு தொடரியில் எங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல் முறையாக வடஇந்தியா செல்லும் காரணத்தால் சற்றே அவசரகதியில் முன்னேற்பாடுகள் இன்றியே சென்றேன்.சென்னை நடுவம் தொடரி நிலையத்திற்கு எனக்கு முன்னமே வந்து காத்திருந்த நண்பர்களுடன் சென்று எங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டோம். எங்களை வழியனுப்ப நண்பர்கள் உதயகுமார், அருண் ஆகியோர் வந்திருந்தனர்.

சரியாக இரவு 11.50மணிக்கு நாங்கள் இருந்த ஹவுரா விரைவு வண்டி கிளம்பியது.தென் மாநிலங்களில் தொடரியில் பயணம் மேற்கொள்வதற்கும், வட பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கும் எத்துனை வேறுபாடு என்பதைப் பற்றி நான் கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அதை கண்கூடாக காணும் வாய்ப்பு கிடைத்தது. சரியாக இருபத்தெட்டு மணிநேர பயணத்திற்குப் பிறகு 23ந் தேதி அதிகாலை 4.30மணிக்கு நாங்கள் ஹவுரா(கொல்கத்தா) சென்று சேர்ந்தோம். 

அங்கே இரண்டு மணிநேர ஓய்விற்குபின் ஜார்கண்டில் உள்ள பக்கூர்(Pahur) நிலையத்திற்கு செல்லும் தொடரியைத் தேடி கண்டுபிடித்து அமர்ந்து கொண்டோம். அந்த வண்டியிலும் எங்களுக்கான முன்பதிவை செய்திருந்ததால் நாங்கள் அந்தந்த இடத்தில் அமர்ந்து கொண்டோம்.வண்டி கிளம்ப ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது அது பயணிகள் வண்டி என்று. என்ஜினோடு சேர்த்து மொத்தமே அய்ந்து பெட்டிதான் அந்தத் தொடரியில் இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பயணம் செய்தபின் நாங்கள் இறங்கவேண்டிய பக்கூர் நிலையத்தில் எங்களை துப்பிவிட்டு அந்த தொடரி தனது பயணத்தைத் தொடர்ந்தது. (அந்த இரண்டு தொடரிப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பின்னர் கூறுகிறேன்.)

அந்த பக்கூர் நிலையத்தில் எங்களை வரவேற்று அழைத்துச் செல்ல அந்நிலையத்திற்கு அருட் தந்தை பெரிய நாயகம் என்பவர் வந்திருந்தார். சந்தேகமே பட வேண்டாம் அவர் தமிழர்தான்.நீண்ட காலமாக அப்பகுதி மக்களுக்கு இறைப்பணி செய்ய அங்கேயே தங்கியிருக்கிறாராம். பக்கூர் நகரத்தை அடுத்துள்ள தொடை (Torai) என்ற கிராமத்தில் CTC-யை (CATECHISTS TRAINING CENTRE ) நிருவகித்து வரும் அவர், எங்களை அவரது வாகனத்தில் அந்த மய்யத்திற்கு அழைத்துச் சென்றார். மய்யத்தில் இருந்த மற்ற அருட் தந்தைகள் சாக்கோமற்றும் பிரான்சிஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். நாங்கள் சென்ற நேரம் மாலை 4மணி என்றபோதும் எங்களுக்கு நல்ல உணவு அங்கே ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர்களில் பகாடியா மக்களிடம் அதிகம் நெருங்கிப்பழகி அவர்களைப் பற்றிய புத்தகம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியவர் அருட் தந்தை சாக்கோ என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பகாடியா மக்களை நாங்கள் எப்படி அணுக வேண்டும் அவர்களின் வாழ்வு முறைகள் என்ன என்பது போன்ற பல தகவல்களை அன்றிரவு எங்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் பயணக் களைப்பினால் நாங்கள் ஓய்வெடுத்தோம். அந்த இரவு சற்று குளிர்தான் என்றாலும் கதகதப்பான கம்பளியின் உதவியால் சமாளித்துக் கொண்டேன். காலை உணவிற்குப் பிறகு பகாடியா மக்களின் வாழ்விடத்திற்கு செல்ல வேண்டும் என்று துரிதப்படுத்தினார் சாக்கோ.நாங்கள் தங்கியிருந்த பக்கூரில் இருந்து 40கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ராஜ்மகல் என்கிற மலைத்தொடரை நோக்கி எங்களை அழைத்துச் சென்றார்.

முதலில் நாங்கள் சென்ற இடம் சத்யா என்ற கிராமம். அங்குதான் நாங்கள் தங்கியிருந்து களஆய்வு செய்ய வேண்டும்  என்பதை தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன். சத்யா என்கிற அந்த கிராமத்தில் பகாடியா சேவா சமிதி கேந்திரா (Paharia Seva Samithi Kendira) என்கிற நிறுவனத்தின் இயக்குநர் அருட் தந்தை டியோனஸ் மற்றும் அங்கு செயல்பட்டுவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட் தந்தை மரியனோஸ் மற்றும் சகோதரிகள் மேக்டலின், நீலமணி ஆகியோருடன் அங்கு பணியாற்றும் சேவியர் உள்ளிட்டோர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றனர். அந்த இன்முக வரவேற்பு விருந்தோம்பல் பாங்கு நாங்கள் அங்கு தங்கியிருந்த நாட்கள் முழுவதும் நீடித்தது. அந்தளவு எங்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.

எங்கள் அனைவரின் பரஸ்பர அறிமுகப் படலத்திற்குப் பிறகு அங்கு எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். உணவை பற்றி குறிப்பிடும் போது உள்ளபடியே மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம் அங்கிருந்த நாள்வரை எனக்கு தமிழ்நாட்டின் முதன்மை உணவான சோறு கிடைத்ததுதான்.அதனால் வெளிமாநிலத்தில் இருக்கும் உணர்வே ஏற்படவில்லை.

உணவிற்குப் பிறகு சாக்கோ விடைபெற்றுச் சென்றார். அதன்பிறகு டியோனஸ், மரியனோஸ் ஆகியோர் சத்யா கிராமத்தின் தன்மைகளைப் பற்றியும் அங்கு நடத்தப்பட்டு வரும் பள்ளியின் பணிகளைப் பற்றியும் விளக்கினர். அன்றைக்கு சந்தை நாள் என்பதால் என்னையும் மரியனையும் அழைத்துக் கொண்டு சென்றார் அருட்தந்தை டியோனஸ். நாங்கள் சாக்கோவுடன் வரும் பொழுதே ஜார்கண்டின் சாலைகளின் அவலத்தையும் போக்குவரத்து சிரமங்களையும் பார்த்தோம் என்றாலும், இப்பொழுது நாங்கள் பார்க்கும் பொழுது மாநிலத்தில் உள்ள மக்கள் எத்தனை பெரிய சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

அந்த அவலத்தை நேரில் கண்டதும் தமிழ்நாடு எத்தகைய முன்னேற்றத்தை  கண்டிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கத் தூண்டியது. ஜார்கண்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் அவலமே ஒட்டுமொத்த மாநிலமும் எப்படிபட்ட முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்பதை காட்டுவதாக இருந்தது. குண்டு குழியுமான சாலைகளில் அந்த மக்கள்படும் அவதிகள் கொஞ்ச நெஞ்சமல்ல. மருந்திற்குக் கூட அரசுப் பேருந்துகள் கிடையாது.மாற்றாக தனியார் வாகனங்கள்தான்.

சிற்றுந்து, வேன், ஜீப் உள்ளிட்டவைகளில்தான் அப்பகுதி மக்கள் தொங்கிக் கொண்டும் வண்டிகளின் மேல் அமர்ந்து கொண்டும் செல்கிறார்கள்.இந்த தொங்கலில் ஆண்-பெண் வேறுபாடெல்லாம் கிடையாது.இதைப் பார்க்கிற பொழுது சென்னையில் மாநகரப் பேருந்துடன் ஒப்பிட வேண்டியிருக்கிறது. சென்னையில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய ஹீரோயிசத்தை காட்ட, பேருந்தின் கூரைமீது ஏறி ஆட்டம் போடுவதும், படிகளில் தொங்குவதும் பாட்டுப்பாடுகிறோம் என்கிற பெயரில் கத்தி கூச்சலிட்டு அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஜார்கண்டில் உள்ள மக்கள் வறுமையின் காரணமாக சிரமப்பட்டு பயணம் மேற்கொள்கிறார்கள். கொடுமை என்னவென்றால் அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்தும் வாகனங்களில் முதன்மையானது எதுவெனில் நடராஜா சர்வீஸ்தான். ஆம், கால்நடைப் பயணத்தைத்தான் அதிகமான மக்கள் மேற்கொள்கிறார்கள்.கால்நடையோடு கால்நடையாக பெரும்பாலான மக்கள் பொதி சுமந்து செல்லும் காட்சி மனதை பிசைவதாக இருந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் படம் பிடித்துக் கொண்டும் சத்யாவிலிருந்து 20கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற கிரன்பூர் என்ற சிறுநகரத்தில் நடக்கும் சந்தையை நாங்கள் அடைந்தோம். சந்தையில் இன்னும் பல ஆச்சரியங்கள் எங்களுக்காக காத்திருந்தது. அவை……
-தொடரும்

திங்கள், 1 ஏப்ரல், 2013

மக்களை சுரண்டும் மெகா மால்கள்



ஹைடெக் மெகா சிட்டி என்கிற திட்டத்தோடு வளர்ந்து வரும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில்வெகு வேகமாக பரவிவருகிறது மெகா மால் (Mega Malls) பிரம்மாண்டமான கட்டடம், எந்நாளும் தடையில்லா மின்சாரம், ஒளி வெள்ளத்தில் மொத்தமும் குளிரூட்டப்பட்ட வளாகம். ஒவ்வொரு மாலிலும் மிகப்பெரிய விளையாட்டு வளாகம், உணவு வளாகம் பல்வேறு வணிக நிறுவனங்கள் இவற்றோடு திரையரங்குகள் என்று மக்களிடம் கல்லா கட்டுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் மெகா மால்கள்.

தற்போது இயங்கிவரும் மால்களுடன் அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக சுமார் இருபது மால்களுக்கு மேல் சென்னையில் திறக்கப்பட இருக்கிறது. அதற்கான பணிகளை பெருமுதலாளிகள் போட்டிபோட்டுக் கொண்டு அதிவேகமாக செய்து வருகிறார்கள். சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இரண்டாம் கட்ட நகரமான கோவை உள்ளிட்ட ஒருசில நகரங்களிலும் மெகா மால்கள் தியேட்டர்களோடு திறக்கப்பட்டிருக்கிறது.
இப்படி திறக்கப்படும் மால்களின் கொள்கையெல்லாம் ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டதுதான். அதாவது, எப்படியாவது மக்களின் கேலிக்கை நுகர்வை மூலதனமாகக் கொண்டு காசாக்கிப் பார்க்க வேண்டும் என்பதுதான். இதனால் அங்கு செல்லும் மக்களிடம் பகல் கொள்ளையாக பணம் பறிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாய்உணவு, விளையாட்டு வளாகங்களில்.
ஒவ்வொருமெகா மாலிலும்  ஒருதளம் முழுவதும், உணவு மற்றும் விளையாட்டு வளாகம் இருக்கும். இந்த உணவு வளாகத்தில் பத்திலிருந்து அய்ம்பது கடைகள் வரை ஒவ்வொரு மாலின் அளவுக்கு ஏற்றார்ப்போல இருக்கும். சைவம், இறைச்சி, இந்தியன், தந்தூரி, சைனீஸ், என்று உலக அளவிலான உணவு வகைகள் தருவதாய் சொல்லி முழுக்க முழுக்க இந்திய உணவை தந்து கொண்டிருப்பார்கள். இந்த உணவகங்களில் உணவு ருசியாக இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு உணவின் விலையும் மயக்கம் போட்டு விழச் செய்து விடும்
எடுத்துக்காட்டிற்கு சங்கீதா என்கிற சைவ உணவகத்தில் ஒரு தோசையின் விலை 30ரூபாய். அதே உணவகம் மெகா மாலில் அதே தோசையை 80ரூபாய்க்கு மேலாக விற்கிறது. இதுதான் மெகா மால்களின் மெகா மோசடி திட்டமாகும். அந்தத் திட்டத்தையும் எப்படி செயல் படுத்துகிறார்கள் என்பதுதான் உச்சம். எப்படியெனில் இம்மாதிரியான உணவகங்களில் நாம் சாப்பிட வேண்டுமென்றால் அந்தந்தக் கடைக்கு நேரடியாய்போய் நாம் பணம் கொடுத்து உண்ண முடியாது. அதற்கு தனியான செலுத்துமிடம் (கவுன்டர்) ஒன்று இருக்கும் அங்குபோய் குறைந்தபட்சம் நூறுரூபாய் கொடுத்து ஒரு சூட்டிகை அட்டை  (Smart Card) வாங்கிக் கொள்ள வேண்டும்.

அந்த சூட்டிகை அட்டை  (Smart Card)க்கு பத்திலிருந்து இருபது ரூபாய் சேவைக் கட்டணமாக எடுத்துக் கொள்வார்கள். நாம் எவ்வளவு ரூபாய்க்கு வேண்டுமானாலும் அதில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். அப்படி சார்ஜ் ஏற்றிய கார்டை எடுத்துக்கொண்டு தண்ணீர்கூட கொடுக்கப்படாத கடைகளில் அவர்களிடம் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கான பணத்தை அந்த கார்டில் தேய்த்து கழித்துக் கொள்வார்கள். சரி.. ஆயிரம் ரூபாய்க்கு சார்ஜ் செய்த கார்டில் சுமார் 800ரூபாய்க்கு சாப்பிட்டாகிவிட்டது. மீதமிருக்கும் இருநூறு ரூபாயில் 20ரூபாய் அட்டைக்கான கட்டணமாக கழிக்கப்பட்டிருக்கும். இவை போக மிச்சமிருக்கும் பணத்தைத் திரும்பக் கேட்டால், பணத்தைத் தராமல் சார், இது வாழ்நாள் அட்டைநீங்கள் எப்போது வந்தாலும் மீதமிருக்கும் காசில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பார்கள்.
நான் வெளியூரிலிருந்து வருகிறேன் திரும்ப வருவது சந்தேகம்தான் அதனால் எனக்கு காசைக் கொடுங்கள் என்று கேட்டால்எங்கள் சட்டப்படி அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என்பார்கள். நாம் கடைக்காரரிடம் நேரடியாய் கொடுக்காமல் இப்படி செலுத்துமிடத்தில் (Counterபணம் கட்டி சார்ஜ் ஏற்றி சாப்பிடுவதால் நமக்கு என்ன பயன் என்றே புரியவில்லை. அட்டையினால் ஏதாவது கழிவு கிடைக்கிறதா? வாழ்நாள் என்பதுயாருடயவாழ்நாள் வரைக்கும். மீதமிருக்கும் காசை ஏன் தரமாட்டேன் என்கிறார்கள்? அந்த காசுக்கு ஏதாவது வட்டி தருவார்களா? என்பது போன்ற கேள்விகளை பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை.
குறிப்பாக ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், கல்லூரி மாணவ  மாணவிகளும் வரும் இடத்தில் இப்படி பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் சண்டையிடுவது கவுரவக் குறைச்சலாய் நினைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதையெல்லாம் எதிர் கேள்வி கேட்காமல் வேதவாக்காய் கேட்டுத் திரும்பிச் செல்கிறார்கள்.
இந்த அட்டை(Smart Cardமுறையில் பிரபல உணவகங்களான, கே.எப்.சி, மெக்டொனால்ட், பிட்ஸாகார்னர், மற்றும் வடஇந்திய ஜெயின் உணவங்கள் வரவே வராது. அவர்களுக்கென்று தனியான பணம் செலுத்துமிடம் இருக்கிறது அவற்றின் மூலம்தான் பணத்தைக் கொடுத்து அட்டையை வாங்க வேணடும். இந்த அட்டையினால் எந்தவிதமான உபயோகமும் வாடிக்கையாளர்களுக்கு கிடையாது. இதுமுழுக்க, முழுக்க, மாலில்உணவு வளாகம் நடத்துபவர்களுக்கும், கடைக்காரர்களுக்குமானது. அதாவது அங்கிருக்கும் ஒவ்வொரு கடையில் நடக்கும் வியாபாரத்தில் 20முதல் 30விழுக்காடு வரை உணவு வளாகம் நடத்துபவர்களுக்கு சென்றுவிடுகிறது.
இவர்களுக்குள் ஒரு இணைப்பை வைத்துக்கொண்டு, வாடிக்கையாளர் களிம் காசை மால் நிர்வாகம் வாங்கிக் கொண்டுவிடும். ஒருமாதம் கழித்து ஒவ்வொரு வருட கணக்கிலும் எவ்வளவு வியாபாரம் ஆகியிருக்கிறது என்று கணக்குப் பார்த்து அதில் அவர்களுக்கு வரவேண்டிய விழுக்காட்டை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை கடைக்காரர்களுக்கு தருவார்கள். இவர்களிடம் வாடகை மற்றும் பராமரிப்பு என்று தனியாய் வாங்கும் மால்களும் உண்டு. இவர்களின் வருமானத்துக்காக, கணக்கு வழக்குகளை சரிபார்க்க உதவும் இந்த கொள்ளைக்கு நம்மிடம் இவர்கள் இருபது ரூபாய் வாங்குகிறார்கள்.
எடுத்துக்காட்டிற்கு ஒருநாளைக்கு 4ஆயிரம்பேர் உணவு வளாகத்தில் சாப்பிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 10ரூபாய் மீதம் வைத்திருக்கிறார்கள் என்று வைத்தால்கூடஒருநாளைக்கு 40ஆயிரம்ருபாய். ஒருமாதத்திற்கு12 லட்சம். ஒருஆண்டிற்கு14கோடியே40லட்சம்ரூபாய் வரும். இதில் வாழ்நாள் உறுப்பினர் என்ற வகையில் திரும்ப வந்து சார்ஜ் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் சுமார் பத்து விழுக்காடு இருந்தால்கூட ஆச்சரியம்தான். அப்படியென்றால் மீதமிருக்கும் சூட்டிகை அட்டை(Smart Card) உறுப்பினர்களின் பணம் முழுவதும் மால்களின் கையில்.
இப்படி இவர்களிடம் சேரும் பணத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது வட்டியோ அல்லது சலுகையோ தருகிறார்களா? என்று பார்த்தால் ஒன்றுமில்லை. இந்த பகல் கொள்ளையை பெரும்பாலும் யாரும் தட்டி கேட்பதேயில்லை.

இதைப்போலவே விளையாட்டு வளாகத்தின் கதையும் நடக்கிறது. அதே சூட்டிகைஅட்டை(Smart Card) அதே சார்ஜ் ஏற்றல் அதே முறையில் பணம் பிடுங்கல் என்று தொடர்கிறது. என்ன ஒன்று குழந்தைகளோடு வருபவர்களின் பாடுதான் படுதிண்டாட்டமாக போய்விடுகிறது. இந்த விளையாட்டு வளாகத்தில் நுழையும் குழந்தைகள்  ஒவ்வொருவரும் அவர்களது பெற்றோர்களின் பணத்தை குறைந்தபட்சம் 500ரூபாயாவது காலி செய்துவிடுகிறார்கள். விளையாட்டுக்காக அட்டையில் தேய்த்தது போக மீதியுள்ள பணத்தை உணவகத்தைப் போல இங்கேயும் திரும்ப வாங்க முடியாது.
அதிலும் சட்டமாய் தரமுடியாது என்று அறிவிப்பு பலகை வேறுபோட்டு வைத்திருக்கிறார்கள். நம் காசை நம்மிடம் கொடுப்பதில் என்ன கடினம் அவர்களுக்கு?. அதைதரமாட்டேன் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?. நாங்கள்  அறிவிப்பு பலகை வைத்துத்தான் வாங்குகிறோம் என்று சொன்னாலும், குடும்பங்களோடு வரும் மக்கள் சரி ஒருநாள் கூத்துதானே என்று நினைத்தும், குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும் நப்பாசை காரணமாகவும் உணவு மற்றும் விளையாட்டு வளாகத்தில் இப்படி பணத்தை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மிகக் கொடுமையான விசயம் எதுவென்றால் வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்படும் அநியாய பணம் பிடுங்கல்தான். சென்னையில் தற்போது இயங்கிவரும் அனைத்து மால்களிலும் விதவிதமான முறையில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணம் என்று ஒன்றே எந்த மாலிலும் கிடையாது. மணிக்கணக்கில் கணக்கிட்டு இந்த மால்கள் பணம் பிடுங்கிக் கொள்கின்றன. மெகா மாலில் திரைப்படம் பார்க்க இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் மூன்று மணிநேர திரைப்படத்திற்கு 120ரூபாய் செலவிடுகிறார் என்றால், வாகன நிறுத்தத்திற்கு குறைந்த பட்சம் 80ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆயிரம் வாகனங்கள் மால்களுக்குள்ளே செல்கிறதென்றால் குறைந்தபட்சம் 80ஆயிரம் ரூபாய், ஒரு மாதத்திற்கு 24இலட்சம் ரூபாய், ஒரு ஆண்டிற்கு 2கோடியே 88லட்சம் ரூபாய்  வசூலிக்கிறார்கள். இந்த கணக்கே நம் கண்ணைக் கட்டுகிறதா இல்லையா? இருசக்கர வாகனத்திற்கு வசூலாகும் தொகை இதுவென்றால் நான்கு சக்கர வாகனங்களின் கட்டண வசூல்வேட்டைப்பற்றி நாம் சொல்ல வேண்டியதேயில்லை.
இந்த மால்களில் உள்ள அனைத்து வாகன நிறுத்தங்களும் முறையான பராமரிப்பின்றி மிக மோசமான முறையிலேயே வைத்திருக்கிறார்கள். மேலும் அங்கு நிறுத்தப்படும் நமது வாகனங்களின் பாதுகாப்பிற்கு நிருவாகம் பொறுப்பேற்காது என்பதையும் அதிரடியாகவே கூறிவிடுகிறார்கள். இந்த வாகன நிறுத்தங்களில் ஏதாவது தீ தொடர்பான விபத்துகள் நேரிட்டாலோ அங்குள்ள அனைத்து வாகனங்களும் எரிந்து நாசமாக வேண்டியதுதான். உடனடியாக வாகனங்களை வெளியேற்றுவதற்கான எந்த வசதியும் அங்கு கிடையாது. இந்த லட்சணத்தில் நேரக்கணக்கீட்டில் பணத்தை மட்டும் பிடுங்கிக் கொள்கிறார்கள் மால்களின் நிருவாகத்தினர்.
இதையெல்லாம்தட்டிக்கேட்கவேண்டியதுவாடிக்கையாளரானநாம்சொகுசு, பொழுது போக்கு என்ற மேற்கத்திய நுகர்வின் காரணமாக வாய்மூடி மவுனிகளாக இருந்து விடுகிறோம். இதனால், அவர்களிடம் எதற்காக 10ரூபாய்க்கும்20ரூபாய்க்கும்சண்டைப்போடவேண்டும்என்றவீண்ஜம்பத்துடனும்,கொள்ளையடிப்பதைப்பற்றிஉணராமையாலும்,நம்மிடம்காசுஇருக்கிறதேஎன்கிறஅலட்சியத்தாலும் மால்கள்நடத்துபவர்கள் கொள்ளையடிப்பதைசட்டமாக்குகிறார்கள்.
பணம் இருப்பவர்கள்தானே இது போன்ற இடங்களுக்கு செல்லவேண்டும் பணம் இல்லாதவர்களை யார் போகச் சொன்னார்கள்? என்று நம்மிடையே உள்ள சில அதிமேதாவிகள் கேள்விகேட்கக் .கூடும். நியாயம்தான், ஆடம்பரங்களைக் காட்டி மக்களை மயக்கும் விதமாக ஆங்காங்கே விளம்பரங்களை செய்தால் யார்தான் அவற்றை பார்க்க வேண்டும் என்று எண்ணத்திற்கு ஆட்படாமல் இருப்பார்கள்.
இதற்கு அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கமாட்டேன் என்கிறது. மால்களில் நடத்தப்படும் தியேட்டர்களில் இவ்வளவுதான் உட்சபட்சமாய் தொகை வாங்க வேண்டும் என்று சட்டம் இருக்கும் போது மால்களில் வாகன நிறுத்தம் மற்றும் உணவு, விளையாட்டு வளாகங்களில் நடைபெறும் கொள்ளைகளை தடுக்கும் படியான சட்டங்களை கொண்டு வர வேண்டுமா வேண்டாமா? எனப்துதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.

சனி, 23 மார்ச், 2013

சீரியல்கள் – புரையோடிப்போன புண்


போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைப்பற்றி மட்டுமே நாம் அதிகம் பேசியிருக்கிறோம், அதைப்பற்றி விவாதித்திருக்கிறோம். குறிப்பாக டாஸ்மாக் சரக்குகளுக்கு அடிமையான நம்மூர் குடிமகன்களின் நிலையை. ஆனால், அதைவிட மோசமான போதை வஸ்து ஒன்று கடந்த 10ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. மற்ற போதைப் பொருள்களுக்கும் இதற்கும் ஒரே வேறுபாடு என்னவென்றால் இந்த போதை, வயது வித்தியாசம் இல்லாமல் பல குடும்பங்களில் புகுந்துள்ளதுதான். அந்த போதைப் பொருளை பார்க்க மட்டுமே முடியும். ஆம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப்ப்படும் சீரியல் எனப்படும் மெகா தொடர்கள்தான் அந்த போதை பொருள்.




போதைக்கு அடிமையானவர்கள் எப்படி நேரம் ஆக ஆக கைகால்களை உதறிக்கொண்டு பதற்றத்துடன் காணப்படுவார்களோ அதைப்போன்ற ஒரு பதற்றத்தை சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களை பல குடும்பங்களில் நம்மால் பார்க்க முடியும். குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். ஆனால், இந்த சீரியல் அடிமைகளோ, தங்கள் சிந்தனை காவுகொடுக்கப்படுவது குறித்துத் தெரியாமலே இருக்கிறார்கள். அந்தவகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள் என்று கூறுவது மிகையாகது.
தொலைக்காட்சி தொடர்கள் எவ்வாறு தயாரிக்கப் படுகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் இந்த அடிமைத் தனத்திலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். மிழ்நாட்டில் தற்போது 49 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டுஎன இந்த நாற்பத்தி ஒன்பதையும் பலவாறாகப் பிரிக்கலாம். அடுத்த சில மாதங்களுக்குள்ளாக மேலும் பல சேனல்கள் வரவிருக்கின்றன.
இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும்  ’டேம்’ (TAM) எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீடு (Television Audience Measurement)  சொல்லும் கணக்கைச் சார்ந்தே இயங்குகின்றன; நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. விளம்பர வருவாய்க்கு மட்டுமல்ல, நிகழ்ச்சித் தயாரிப்புக்கும்டேம்அளிக்கும் விவரங்கள் முக்கியமானவை. போட்டி ஊடகங்கள் என்ன நிகழ்ச்சியை, எந்த நேரத்தில் ஒளிபரப்புகின்றன, அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருவாய் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள், ஏன் அதே நேரத்தில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்என்பதையெல்லாம் சக நிறுவனங்கள் அறிந்துகொள்ள இந்த  டேம்’  விவரங்கள் அவசியம்.

இதன் பிரதிபலிப்பை தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்கலாம். முன்னணி தொலைக்காட்சியில் வாரநாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. ஆனால், மற்ற தொலைக்காட்சிகளில் சராசரியாக நாளொன்றுக்கு 9 நெடுந்தொடர்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், ’டேம்கணக்கின்படி இந்தக்காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கைக் குறைவு. எனவே விளம்பர வருமானம் முன்னணி தொலைக்காட்சிக்கு கிடைக்கும் அளவுக்கு மற்ற தொலைக்காட்சிக்கு வருவதில்லை.
முன்னணி தொலைக்காட்சி ஒருதொடரை ஒளிபரப்புவதற்கு பகல் நேரங்களில் அரைமணிக்கு ரூபாய் 7 முதல் 9 லட்சம் வரையில் வசூலிக்கிறது என்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். ‘பிரைம்டைம்என்று சொல்லப்படும் இரவு 7.30 முதல் 9.30 வரையிலான நேரத்தில் தங்களது தொடரை ஒளிபரப்ப வேண்டுமென்றால், அரைமணி நேரத்துக்கு கட்டணம் 12முதல் 14லட்சம் ரூபாயும், இரவு 10மணிக்கு மேல் ரூபாய் 6முதல் 8 லட்சம் வரையும் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தத் தொகை திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களுக்கு மட்டும்தான். சனி, ஞாயிறு கதையே வேறு.

இப்படி வாரத்தின் ஐந்து நாட்களுக்கு குறிப்பிட்ட அரைமணி நேரத்தை ஒரு தயாரிப்பாளர் வாடகைக்கு எடுத்து கொள்வார். அந்த அரைமணி நேரத்தில் 18 நிமிடங்கள் தொடருக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 12 நிமிடங்களை விளம்பரதாரர்களுக்கு விற்பார். அதுவும் பத்துப் பத்து விநாடிகளாக. இப்படி விற்றுக் கிடைக்கும்  பணத்தில்தான் அவர் அரைமணி நேரத்துக்கான வாடகையை தொலைக்காட்சிக்குத் தரவேண்டும். பணிபுரியும் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சம்பளம் தரவேண்டும். லாபமும் பார்க்க வேண்டும்.
டேம்’  தரும் வாராந்திர புள்ளி விபரங்கள் அடிப்படையிலேயே விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்களை தருவார்கள். ஒருவேளை எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. கெஞ்சிக் கூத்தாடினால், சந்தை நிலவரத்தைவிடக் குறைவான தொகைக்கு பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக்கொண்டால் முதலுக்கே மோசமாகும். இன்னொரு பக்கம், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் தொலைக்காட்சியின் நிருவாகம் கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்திவிடும். இதற்கு பல எடுத்துகாட்டுகளை கூறலாம். இது முன்னணி தொலைக்காட்சியின் நிலவரம்.
மற்ற தொலைக்காட்சிகள் வேறு வகையான வழி முறைகளை பின்பற்றுகிறது. அவர்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரை அழைத்து ஒருதொடர் அல்லது நிகழ்ச்சியைத் தயாரிக்கச் சொல்வார்கள். அதற்கான தொகையைத் தீர்மானித்து கொடுத்து விடுவார்கள். தயாரிப்பாளர் அந்தத் தொகைக்குள் தொடரையோ, நிகழ்ச்சியையோ தயாரித்துக் கொடுத்துவிட்டு, அந்த தொகைக்குள்ளேயே லாபத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். விளம்பர வருவாய் முழுவதையும் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக் கொள்ளும்.

ஒவ்வொரு நெடுந்தொடரின் முடிவிலும் அந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதில் பங்காற்றிய இயக்குநர் தொடங்கி காபி வாங்கிக் கொண்டு வரும் பையன் வரையிலான அனைவரது பெயர்களும் போடப்பட்டாலும், ஒருதொடருக்கான கதையையும் காட்சிகளையும் கதாசிரியரோ இயக்குநரோ முடிவு செய்வதில்லை என்பதுதான் கவனிக்கத்தக்க ஒன்று. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், விளம்பர நிறுவனங்களும் சொல்லும் வகையிலேயே சீரியல்கள் உருவாகின்றன.
அதுமட்டுமல்ல, தொடரின் நடுவில் மூன்று விளம்பர இடைவேளைகள். எனவே ஒவ்வொரு 6 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். மறுநாள் தொடருக்காக ஏங்கும் விதத்தில், முந்தைய நாளின் இறுதிக்காட்சி அதிர்ச்சி நிரம்பியதாக அமைய வேண்டும். ஒரு கதாபாத்திரத்தைக் கொன்று விடுமாறு தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் கொன்றுவிட்டு, மிச்சமிருப்பவர்களை வைத்து இயக்குநர் கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.
இந்தக் கதைத் தொடர்கள் அனைத்தும் பெண்களை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்படுகிறது. பெண்கள்தான் முக்கியமான பார்வையாளர்கள் என்பதால், பெண் கதாபாத்திரம் தான் மய்யம். கண்டிப்பாக அவள் ஆளும் வர்க்கப் பண்பாட்டின் வரையறுப்புப்படிநல்லவளாகஎன்ன படித்திருந்தாலும், இந்து மதச் சடங்குகளில் அது கற்றுத்தந்த மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கொண்டு வாழும் பாத்திரமாக இருப்பாள். அதேபோல் கதைநாயகிக்கு இணையாக ஒரு கெட்டவள் பாத்திரம் இருக்க வேண்டும். அந்த பாத்திரம்தான் கதையின் நகர்த்தலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு நாளின் முடிவும் அந்த பாத்திரத்தின் குரூரத்துடனேயே முடிக்கப்படும்.
இந்த மய்யக் கதைகள் ஒரு வீடு அல்லது அலுவலகம் அல்லது கோயில் ஆகிய மூன்று இடங்களிலேயே பொதுவாக நகரும். அப்போது தான் தயாரிப்புச் செலவு குறையும். பேருந்து நிலையம், தொடரிநிலையம் கடைவீதி போன்ற இடங்களுக்கு கதைக்களம் மாறினாலும், செலவுகட்டுபடிஆகாது. எனவே நல்லதோ கெட்டதோ எதுவானாலும் இந்த மூன்று இடங்களில் முடிந்தாக வேண்டும்.

கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகி விட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர்கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள். துணைக் கதாபாத்திரங்களும் நல்லவன்(ள்), கெட்டவன்(ள்), அப்பாவி என்ற மூன்று பிரிவுக்குள் மட்டுமே அடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காட்சியிலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில்மோதலைக் கொண்டு வரமுடியும். கதையும்  ’சுவாரஸ்யமாக’  நகரும்.
நாயகிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள்எனக்கதையைத் தொடங்கினால், தரகர் பொய் சொல்கிறாரா…? அல்லதுஎதிரிதவறான மணமகனை பரிந்துரைக்கிறாரா…? என்று மக்களை தடுமாற்றத்திற்குள்ளாக்கி சில நாட்களுக்கு காட்சிகளை நகர்த்தலாம். பிறகு திருமணம் ஆகுமா, ஆகாதா என்றஎதிர்பார்ப்பைவைத்து பல நாட்களைக் கடத்தலாம். திருமண மண்டபத்தில் தாலி காணாமல் போவதில் ஆரம்பித்து சீர் அல்லது வரதட்சணையில் பற்றாக்குறை ஏற்படுவது வரை பிரச்சினையை 10 அல்லது 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.
திருமணமான பிறகு கணவனுடன் சேருவாளா அல்லது புகுந்த வீட்டில் யாராவது சேரவிடாமல் தடுப்பார்களா என்ற கேள்வியை போடலாம். அது தொடர்பான காட்சிகளை நுழைக்கலாம். பிறகு கர்ப்பம். கர்ப்பப்பையில் பிரச்சினை அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிக்கல் அல்லது அபார்ஷன் செய்ய யாரேனும் முயற்சி. அப்புறம் குழந்தை பிறப்பு அல்லது பிறந்த குழந்தை திருடப்படுதல். திருடப்பட்ட குழந்தை இன்னொரு இடத்தில் வளர்தல், அக்குழந்தைக்காகத் தாய் தவித்தல்.…
இப்படியாக 40 நாட்களுக்கு ஒரு கதை வீதம் மையக் கதையை நகர்த்திக் கொண்டே செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட காலஇடைவெளியில் யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். அவர்களைக் காப்பாற்ற நாயகி தீமிதிக்க வேண்டும் அல்லது மண்சோறு சாப்பிட வேண்டும். இந்தப்பகுதிமுடிந்ததுமே காவல் நிலையம் வரவேண்டும். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்கூடுதலாக இந்தத் தொடர்களைப் பார்வையிடும் மக்கள் அச்சச்சோஅடப்பாவிஎன்று உச்சுக்கொட்டும் விதமாக சில வசனங்கள் இருக்க வேண்டும்.
இப்படியான சூத்திரங்களுடன்தான் முன்னணித் தொலைக்காட்சியில் பணியாற்றும் இயக்குநர் குறைந்த பட்சம் ஒருநாளைக்கு ஒன்றரை எபிசோட்டுக்கான காட்சிகளை படம்பிடிக்க வேண்டும். அதாவது 18 + 9 நிமிடங்கள். மற்ற தொலைக்காட்சிகளில் ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று எபிசோடுக்கான காட்சிகளைச்சுருட்டவேண்டும். அதனால்தான் நடப்பது அல்லது மாடிப்படிகளில் இறங்குவது அல்லது ஆட்டோவில் பயணம் செய்வதை அதிக நேரம் காண்பிக்கிறார்கள்.
நாயகன் அல்லது நாயகி சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அவர்களுடைய வீடு பெரிய பங்களா போலவோ அல்லது ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் புழங்கக்கூடிய அளவுக்கு தாராளமாகவோ இருக்கும். “என்னது ஆக்சிடெண்டா?” என்று ஒரு வசனத்துக்கான முகபாவத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாகக் காட்டவேண்டும். அதற்குத் தோதாக இடைவெளிவிட்டு ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டுமானால் வீடு பெரியதாக இருந்தால் தானே முடியும். அதுமட்டுமல்ல, வீட்டுக்குள்ளே மாடிப்படி இருப்பதும் அவசியம்.
இதுவன்றி அவ்வப்போது கதாபாத்திரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கோ, ஆத்திரத்துக்கோ ஆளாகவேண்டும். அதிர்ச்சி என்றால் வசனமே பேசமுடியாமல் வாயடைத்துப் போகும் அளவுக்கு கடுமையான அதிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி, பயங்கரமான பின்னணி இசைபோட்டு நேரத்தை இழுக்க முடியும். ஒரு நெடுந்தொடரில்  20 நடிகர்கள் இருந்தால், அந்த 20 மூஞ்சிகளின் கோபம், அதிர்ச்சி, சோகம், திகைப்பு போன்றவற்றை குளோசப்பிலும் பல கோணங்களிலும் முன்னரே எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜோக்கர் கார்டு போல செருகிக் கொள்ள முடியும். இப்படியெல்லாம்அரும்பாடுபட்டுத்தான்ஒரு தொடரின் இயக்குநர்  18 நிமிடக்காட்சி என்கிற ஒருநாள் இலக்கை தினந்தோறும் எட்டுகிறார்.
பொதுவாக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களேதான் அதிகமான தொடர்களில் நடிக்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்களின் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் மற்ற கதாபத்திரங்களை கொண்டு ஒரு கிளைக் கதையை சட்டென்று தொடங்கி விடுவார்கள். இதற்கு விளம்பர நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரச்சினை. “என்ன ஒரே டிரையா இருக்குஅந்த கேரக்டரை கொன்னுடுஇல்லைனா அவனை கோமாவுல படுக்கவை…” என அவர்கள் கட்டளையிடுவார்கள். மறுபேச்சில்லாமல் அதை கடைபிடிக்க வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் நெடுந்தொடர்களைத்தான் அன்றாடம் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறிக்கொண்டு பெண்களை மேலும் முடக்கிப் போடும் வேலையை சிறப்பாகவே இந்த சீரியல்கள் செய்து வருகின்றன. எவையெல்லாம் பெண்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்களோ அவைகளையே கதைக்களங்களாக எடுத்துக்கொண்டு மேலும் பெண்களை பின்னோக்கி இழுக்கும் வேலையை செய்கிறது தொலைக்காட்சி நிருவாகம். நம் வீட்டுப் பெண்களும் உலக நடப்புகளில் கவனத்தை திருப்புவதற்குப் பதிலாக சீரியலே சிவமயம் என்று தொலைக்காட்சி முன் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
பெண்கள் சிந்தனை முடக்கத்திற்கு வழிவகுக்கும் விதமாக புரையோடிப் போன புண் போல் சீழ் பிடித்து நம் வீட்டை சூழ்ந்து நிற்கும் இந்த சீரியல்களை அதிரடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியெறிந்தால் மட்டுமே பெண்களை சீரியல் போதையில் இருந்து மாற்றி சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனைப் பாதைக்கு கொண்டு வரமுடியும்.