சனி, 23 மார்ச், 2013

சீரியல்கள் – புரையோடிப்போன புண்


போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களைப்பற்றி மட்டுமே நாம் அதிகம் பேசியிருக்கிறோம், அதைப்பற்றி விவாதித்திருக்கிறோம். குறிப்பாக டாஸ்மாக் சரக்குகளுக்கு அடிமையான நம்மூர் குடிமகன்களின் நிலையை. ஆனால், அதைவிட மோசமான போதை வஸ்து ஒன்று கடந்த 10ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்து வருகிறது. மற்ற போதைப் பொருள்களுக்கும் இதற்கும் ஒரே வேறுபாடு என்னவென்றால் இந்த போதை, வயது வித்தியாசம் இல்லாமல் பல குடும்பங்களில் புகுந்துள்ளதுதான். அந்த போதைப் பொருளை பார்க்க மட்டுமே முடியும். ஆம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப்ப்படும் சீரியல் எனப்படும் மெகா தொடர்கள்தான் அந்த போதை பொருள்.




போதைக்கு அடிமையானவர்கள் எப்படி நேரம் ஆக ஆக கைகால்களை உதறிக்கொண்டு பதற்றத்துடன் காணப்படுவார்களோ அதைப்போன்ற ஒரு பதற்றத்தை சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களை பல குடும்பங்களில் நம்மால் பார்க்க முடியும். குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். ஆனால், இந்த சீரியல் அடிமைகளோ, தங்கள் சிந்தனை காவுகொடுக்கப்படுவது குறித்துத் தெரியாமலே இருக்கிறார்கள். அந்தவகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள் என்று கூறுவது மிகையாகது.
தொலைக்காட்சி தொடர்கள் எவ்வாறு தயாரிக்கப் படுகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் இந்த அடிமைத் தனத்திலிருந்து அவர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். மிழ்நாட்டில் தற்போது 49 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டுஎன இந்த நாற்பத்தி ஒன்பதையும் பலவாறாகப் பிரிக்கலாம். அடுத்த சில மாதங்களுக்குள்ளாக மேலும் பல சேனல்கள் வரவிருக்கின்றன.
இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும்  ’டேம்’ (TAM) எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீடு (Television Audience Measurement)  சொல்லும் கணக்கைச் சார்ந்தே இயங்குகின்றன; நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. விளம்பர வருவாய்க்கு மட்டுமல்ல, நிகழ்ச்சித் தயாரிப்புக்கும்டேம்அளிக்கும் விவரங்கள் முக்கியமானவை. போட்டி ஊடகங்கள் என்ன நிகழ்ச்சியை, எந்த நேரத்தில் ஒளிபரப்புகின்றன, அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருவாய் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள், ஏன் அதே நேரத்தில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்என்பதையெல்லாம் சக நிறுவனங்கள் அறிந்துகொள்ள இந்த  டேம்’  விவரங்கள் அவசியம்.

இதன் பிரதிபலிப்பை தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்கலாம். முன்னணி தொலைக்காட்சியில் வாரநாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. ஆனால், மற்ற தொலைக்காட்சிகளில் சராசரியாக நாளொன்றுக்கு 9 நெடுந்தொடர்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், ’டேம்கணக்கின்படி இந்தக்காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கைக் குறைவு. எனவே விளம்பர வருமானம் முன்னணி தொலைக்காட்சிக்கு கிடைக்கும் அளவுக்கு மற்ற தொலைக்காட்சிக்கு வருவதில்லை.
முன்னணி தொலைக்காட்சி ஒருதொடரை ஒளிபரப்புவதற்கு பகல் நேரங்களில் அரைமணிக்கு ரூபாய் 7 முதல் 9 லட்சம் வரையில் வசூலிக்கிறது என்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். ‘பிரைம்டைம்என்று சொல்லப்படும் இரவு 7.30 முதல் 9.30 வரையிலான நேரத்தில் தங்களது தொடரை ஒளிபரப்ப வேண்டுமென்றால், அரைமணி நேரத்துக்கு கட்டணம் 12முதல் 14லட்சம் ரூபாயும், இரவு 10மணிக்கு மேல் ரூபாய் 6முதல் 8 லட்சம் வரையும் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தத் தொகை திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களுக்கு மட்டும்தான். சனி, ஞாயிறு கதையே வேறு.

இப்படி வாரத்தின் ஐந்து நாட்களுக்கு குறிப்பிட்ட அரைமணி நேரத்தை ஒரு தயாரிப்பாளர் வாடகைக்கு எடுத்து கொள்வார். அந்த அரைமணி நேரத்தில் 18 நிமிடங்கள் தொடருக்கு எடுத்துக் கொண்டு, மீதமுள்ள 12 நிமிடங்களை விளம்பரதாரர்களுக்கு விற்பார். அதுவும் பத்துப் பத்து விநாடிகளாக. இப்படி விற்றுக் கிடைக்கும்  பணத்தில்தான் அவர் அரைமணி நேரத்துக்கான வாடகையை தொலைக்காட்சிக்குத் தரவேண்டும். பணிபுரியும் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சம்பளம் தரவேண்டும். லாபமும் பார்க்க வேண்டும்.
டேம்’  தரும் வாராந்திர புள்ளி விபரங்கள் அடிப்படையிலேயே விளம்பரதாரர்கள் தங்களது விளம்பரங்களை தருவார்கள். ஒருவேளை எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. கெஞ்சிக் கூத்தாடினால், சந்தை நிலவரத்தைவிடக் குறைவான தொகைக்கு பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக்கொண்டால் முதலுக்கே மோசமாகும். இன்னொரு பக்கம், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் தொலைக்காட்சியின் நிருவாகம் கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்திவிடும். இதற்கு பல எடுத்துகாட்டுகளை கூறலாம். இது முன்னணி தொலைக்காட்சியின் நிலவரம்.
மற்ற தொலைக்காட்சிகள் வேறு வகையான வழி முறைகளை பின்பற்றுகிறது. அவர்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரை அழைத்து ஒருதொடர் அல்லது நிகழ்ச்சியைத் தயாரிக்கச் சொல்வார்கள். அதற்கான தொகையைத் தீர்மானித்து கொடுத்து விடுவார்கள். தயாரிப்பாளர் அந்தத் தொகைக்குள் தொடரையோ, நிகழ்ச்சியையோ தயாரித்துக் கொடுத்துவிட்டு, அந்த தொகைக்குள்ளேயே லாபத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். விளம்பர வருவாய் முழுவதையும் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக் கொள்ளும்.

ஒவ்வொரு நெடுந்தொடரின் முடிவிலும் அந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதில் பங்காற்றிய இயக்குநர் தொடங்கி காபி வாங்கிக் கொண்டு வரும் பையன் வரையிலான அனைவரது பெயர்களும் போடப்பட்டாலும், ஒருதொடருக்கான கதையையும் காட்சிகளையும் கதாசிரியரோ இயக்குநரோ முடிவு செய்வதில்லை என்பதுதான் கவனிக்கத்தக்க ஒன்று. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், விளம்பர நிறுவனங்களும் சொல்லும் வகையிலேயே சீரியல்கள் உருவாகின்றன.
அதுமட்டுமல்ல, தொடரின் நடுவில் மூன்று விளம்பர இடைவேளைகள். எனவே ஒவ்வொரு 6 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். மறுநாள் தொடருக்காக ஏங்கும் விதத்தில், முந்தைய நாளின் இறுதிக்காட்சி அதிர்ச்சி நிரம்பியதாக அமைய வேண்டும். ஒரு கதாபாத்திரத்தைக் கொன்று விடுமாறு தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் கொன்றுவிட்டு, மிச்சமிருப்பவர்களை வைத்து இயக்குநர் கதையை நகர்த்திச் செல்லவேண்டும்.
இந்தக் கதைத் தொடர்கள் அனைத்தும் பெண்களை முதன்மைப்படுத்தியே உருவாக்கப்படுகிறது. பெண்கள்தான் முக்கியமான பார்வையாளர்கள் என்பதால், பெண் கதாபாத்திரம் தான் மய்யம். கண்டிப்பாக அவள் ஆளும் வர்க்கப் பண்பாட்டின் வரையறுப்புப்படிநல்லவளாகஎன்ன படித்திருந்தாலும், இந்து மதச் சடங்குகளில் அது கற்றுத்தந்த மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை கொண்டு வாழும் பாத்திரமாக இருப்பாள். அதேபோல் கதைநாயகிக்கு இணையாக ஒரு கெட்டவள் பாத்திரம் இருக்க வேண்டும். அந்த பாத்திரம்தான் கதையின் நகர்த்தலுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால், ஒவ்வொரு நாளின் முடிவும் அந்த பாத்திரத்தின் குரூரத்துடனேயே முடிக்கப்படும்.
இந்த மய்யக் கதைகள் ஒரு வீடு அல்லது அலுவலகம் அல்லது கோயில் ஆகிய மூன்று இடங்களிலேயே பொதுவாக நகரும். அப்போது தான் தயாரிப்புச் செலவு குறையும். பேருந்து நிலையம், தொடரிநிலையம் கடைவீதி போன்ற இடங்களுக்கு கதைக்களம் மாறினாலும், செலவுகட்டுபடிஆகாது. எனவே நல்லதோ கெட்டதோ எதுவானாலும் இந்த மூன்று இடங்களில் முடிந்தாக வேண்டும்.

கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகி விட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர்கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள். துணைக் கதாபாத்திரங்களும் நல்லவன்(ள்), கெட்டவன்(ள்), அப்பாவி என்ற மூன்று பிரிவுக்குள் மட்டுமே அடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காட்சியிலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில்மோதலைக் கொண்டு வரமுடியும். கதையும்  ’சுவாரஸ்யமாக’  நகரும்.
நாயகிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள்எனக்கதையைத் தொடங்கினால், தரகர் பொய் சொல்கிறாரா…? அல்லதுஎதிரிதவறான மணமகனை பரிந்துரைக்கிறாரா…? என்று மக்களை தடுமாற்றத்திற்குள்ளாக்கி சில நாட்களுக்கு காட்சிகளை நகர்த்தலாம். பிறகு திருமணம் ஆகுமா, ஆகாதா என்றஎதிர்பார்ப்பைவைத்து பல நாட்களைக் கடத்தலாம். திருமண மண்டபத்தில் தாலி காணாமல் போவதில் ஆரம்பித்து சீர் அல்லது வரதட்சணையில் பற்றாக்குறை ஏற்படுவது வரை பிரச்சினையை 10 அல்லது 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.
திருமணமான பிறகு கணவனுடன் சேருவாளா அல்லது புகுந்த வீட்டில் யாராவது சேரவிடாமல் தடுப்பார்களா என்ற கேள்வியை போடலாம். அது தொடர்பான காட்சிகளை நுழைக்கலாம். பிறகு கர்ப்பம். கர்ப்பப்பையில் பிரச்சினை அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிக்கல் அல்லது அபார்ஷன் செய்ய யாரேனும் முயற்சி. அப்புறம் குழந்தை பிறப்பு அல்லது பிறந்த குழந்தை திருடப்படுதல். திருடப்பட்ட குழந்தை இன்னொரு இடத்தில் வளர்தல், அக்குழந்தைக்காகத் தாய் தவித்தல்.…
இப்படியாக 40 நாட்களுக்கு ஒரு கதை வீதம் மையக் கதையை நகர்த்திக் கொண்டே செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட காலஇடைவெளியில் யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். அவர்களைக் காப்பாற்ற நாயகி தீமிதிக்க வேண்டும் அல்லது மண்சோறு சாப்பிட வேண்டும். இந்தப்பகுதிமுடிந்ததுமே காவல் நிலையம் வரவேண்டும். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்கூடுதலாக இந்தத் தொடர்களைப் பார்வையிடும் மக்கள் அச்சச்சோஅடப்பாவிஎன்று உச்சுக்கொட்டும் விதமாக சில வசனங்கள் இருக்க வேண்டும்.
இப்படியான சூத்திரங்களுடன்தான் முன்னணித் தொலைக்காட்சியில் பணியாற்றும் இயக்குநர் குறைந்த பட்சம் ஒருநாளைக்கு ஒன்றரை எபிசோட்டுக்கான காட்சிகளை படம்பிடிக்க வேண்டும். அதாவது 18 + 9 நிமிடங்கள். மற்ற தொலைக்காட்சிகளில் ஒருநாளைக்கு இரண்டு முதல் மூன்று எபிசோடுக்கான காட்சிகளைச்சுருட்டவேண்டும். அதனால்தான் நடப்பது அல்லது மாடிப்படிகளில் இறங்குவது அல்லது ஆட்டோவில் பயணம் செய்வதை அதிக நேரம் காண்பிக்கிறார்கள்.
நாயகன் அல்லது நாயகி சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அவர்களுடைய வீடு பெரிய பங்களா போலவோ அல்லது ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் புழங்கக்கூடிய அளவுக்கு தாராளமாகவோ இருக்கும். “என்னது ஆக்சிடெண்டா?” என்று ஒரு வசனத்துக்கான முகபாவத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாகக் காட்டவேண்டும். அதற்குத் தோதாக இடைவெளிவிட்டு ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டுமானால் வீடு பெரியதாக இருந்தால் தானே முடியும். அதுமட்டுமல்ல, வீட்டுக்குள்ளே மாடிப்படி இருப்பதும் அவசியம்.
இதுவன்றி அவ்வப்போது கதாபாத்திரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கோ, ஆத்திரத்துக்கோ ஆளாகவேண்டும். அதிர்ச்சி என்றால் வசனமே பேசமுடியாமல் வாயடைத்துப் போகும் அளவுக்கு கடுமையான அதிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி, பயங்கரமான பின்னணி இசைபோட்டு நேரத்தை இழுக்க முடியும். ஒரு நெடுந்தொடரில்  20 நடிகர்கள் இருந்தால், அந்த 20 மூஞ்சிகளின் கோபம், அதிர்ச்சி, சோகம், திகைப்பு போன்றவற்றை குளோசப்பிலும் பல கோணங்களிலும் முன்னரே எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜோக்கர் கார்டு போல செருகிக் கொள்ள முடியும். இப்படியெல்லாம்அரும்பாடுபட்டுத்தான்ஒரு தொடரின் இயக்குநர்  18 நிமிடக்காட்சி என்கிற ஒருநாள் இலக்கை தினந்தோறும் எட்டுகிறார்.
பொதுவாக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களேதான் அதிகமான தொடர்களில் நடிக்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்களின் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் மற்ற கதாபத்திரங்களை கொண்டு ஒரு கிளைக் கதையை சட்டென்று தொடங்கி விடுவார்கள். இதற்கு விளம்பர நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரச்சினை. “என்ன ஒரே டிரையா இருக்குஅந்த கேரக்டரை கொன்னுடுஇல்லைனா அவனை கோமாவுல படுக்கவை…” என அவர்கள் கட்டளையிடுவார்கள். மறுபேச்சில்லாமல் அதை கடைபிடிக்க வேண்டும்.
இப்படி உருவாக்கப்படும் நெடுந்தொடர்களைத்தான் அன்றாடம் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கூறிக்கொண்டு பெண்களை மேலும் முடக்கிப் போடும் வேலையை சிறப்பாகவே இந்த சீரியல்கள் செய்து வருகின்றன. எவையெல்லாம் பெண்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்களோ அவைகளையே கதைக்களங்களாக எடுத்துக்கொண்டு மேலும் பெண்களை பின்னோக்கி இழுக்கும் வேலையை செய்கிறது தொலைக்காட்சி நிருவாகம். நம் வீட்டுப் பெண்களும் உலக நடப்புகளில் கவனத்தை திருப்புவதற்குப் பதிலாக சீரியலே சிவமயம் என்று தொலைக்காட்சி முன் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
பெண்கள் சிந்தனை முடக்கத்திற்கு வழிவகுக்கும் விதமாக புரையோடிப் போன புண் போல் சீழ் பிடித்து நம் வீட்டை சூழ்ந்து நிற்கும் இந்த சீரியல்களை அதிரடி அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியெறிந்தால் மட்டுமே பெண்களை சீரியல் போதையில் இருந்து மாற்றி சமூக முன்னேற்றத்திற்கான சிந்தனைப் பாதைக்கு கொண்டு வரமுடியும்.