சனி, 20 டிசம்பர், 2014

எவருக்கேனும் அடிமையாய்...


எங்கள்
அண்ணலே
நாங்கள் இன்னும்
அப்படியேதான் இருக்கிறோம்…
மாற்றமுமில்லை
ஏற்றமுமில்லை…

நீ
எங்களுக்காய்
சமைத்த பாதையில்
பயணிக்க
என்றும்
துணிந்தோமில்லை…
தடைக்கற்களை
அப்பாதைகளில்
நிறைத்தது
நாங்களேதான்…

இன்னும்
தெளிவாய்
சொல்வதானால்
நீ
நிறுத்திச் சென்ற
பாதையிலிருந்து
பல தளங்கள்
நகர்ந்து சென்றுள்ளோம்…
முன்னோக்கியல்ல
பின்னோக்கித்தான்…

அடிமை
விலங்குடைக்க
அறிவாயுதம் தந்தாய்…
மகிழ்ச்சியோடு
மார்தட்டிச் சொல்கிறோம்
மறந்துங்கூட
நாங்கள் அதை 
பயன்படுத்துவதில்லை…
அறிவுக்குச்
சேதாரம் வந்துவிடும்
என்ற
அச்சம்தான் காரணம்….

ஆம்…
உன்னறிவையும்
உன்னுழைப்பையும்
பின்பற்றினோமில்லை…
உன் துதிபாடுவதிலேதான்
எங்கள் காலம்
கழிகிறது….

நாங்கள்
ஒன்றுபட்டு
நின்றதாய்
நினைவில்லை…
உதிரியாய் நின்றே
ஒலிப்பதால்தான்
எவருக்கும்
கேட்பதில்லை
எங்களின்
உரிமைக்குரல்…

எது ஒழிய ‘
பாடுபட்டாயோ
அதிலேதான்
நாங்கள்
ஒளிந்து
கொண்டிருக்கிறோம்…
ஜாதிப் பெருமை பேசும்
பெருநோய்
எங்களையும்
தாக்கிவிட்டது…

இன
இழிவை ஒழிக்க
இந்து மதத்தை
விட்டொழி என்றாய்…
விட்டொழித்தோம்…
மதத்தையல்ல
உன்
மகத்துவத்தை…

இப்பொழுதெல்லாம்
நாங்கள்
கூச்சப்படுவதேயில்லை…
ஆம்
எங்களோடு
உன் படத்திற்கும்
சிலைக்கும்
மறக்காமல்
இடுகிறோமே
மதக்குறியீடை



உனை 
போற்றுகிறோம்…
எங்களின் 
ஒதுக்கீட்டிற்கு
பங்கம் 
வரும்போதெல்லாம்…

உன் புகழும் 
பாடுகிறோம்…
எங்களைவிட
எங்கள் எதிரிக்கு
உன் அறிவின்
தாக்கமுள்ளதால்…

நிச்சயமாய்
கூறுகிறேன்
நாங்கள் மட்டுமல்ல
எங்களின்
பலதலைமுறைகளும்
உன் பெயரை மட்டுமே
உச்சரித்து வாழும்…
உன் கொள்கையைத்தான்
நாங்கள் என்றோ
ஆழக்குழி தோண்டி
புதைத்துவிட்டோமே…

நாங்கள்
யானையைப்
போன்றவர்கள்..
எங்கள் பலத்தை
நாங்கள்
உணர்ந்ததேயில்லை…

அதனால்தான்
எவருக்கேனும்
அடிமையாய்
இருப்பதை
பெருமையாய்
எண்ணுகிறோம்…

எவர் எங்களை
தாழ்த்தினாரோ
அவர்களையே
அரியணையேற்றி
அழகு பார்க்கிறோம்…
நாங்கள்
ஆளப்படுவதையும்...,
கொல்லப்படுவதையும்...,
ஆசைதீர கண்டு
இன்புறுகிறோம்…

அவர்களின்
வளர்ச்சிகாய்
பாடுபடும்
நாங்கள்
காத்திருக்கிறோம்…
எப்போதேனும்
மானியங்களாய்
ஒதுக்கீடுகளாய்
எலும்புத் துண்டுகள்
வந்துவிழும்
என்ற நம்பிக்கையுடன்…


நாங்கள்
நெஞ்சம் நிமிர்த்தி
கூறுகிறோம்….
மனித நேயத்தின்
குறியீடான
இந்துத்துவம்(?)
உன்னை
சுவீகரிக்க
எடுக்கும்
முயற்சியில்
எங்களின்
பங்கே
முதன்மையானது….

அறிவுலக ஆசானே
உன் நினைவு  நாளிலும்
நீ பிறந்த நாளிலும்
எப்பொழுதும்
சூளுரைப்பதுபோல்
இப்பொழுதும்
ஆணையிட்டுக் கூறுகிறோம்…
எங்களின்
வாழ்வுரிமைக்கும்
விடுதலைக்குமாய்
என்றைக்கும்
போராடுவதாய்…
சூளுரைப்பதோடு
நிறுத்திக்கொள்கிறோம்…

-சகா

(06/12/2014 டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் எழுதியது...)

குயில்பாட்டு....

குயில்பாட்டு நீயும் கேட்பீர்...
குயிலுக்கு ஜாதியுண்டா...?
மயிலாட்டம் நீயும் பார்ப்பீர்...
மயிலுக்கு ஜாதியுண்டா...?
புலிகளும் தன்னினத்தை 
தாழ்த்துவதுண்டா...?
படித்தாலும் அறிவுமற்ற
தெளியா மனிதா....
(குயில்பாட்டு


நீர்வாழும் ஆமைகளுக்கு
ஜாதியின் சங்கமுண்டா....?....ஆ.....
மதங்கொள்ளும் யானைகளுக்கு
ஜாதியின் சண்டையுண்டா....?...ஆ...
சேற்றுக்குள் வாழும் பன்றிப்போலே....
ஜாதிமுலாம் பூசிக்கொள்வாய் வீணே.....
தீண்டாமை மட்டுமிங்கே
தீராத நோயாய் வாழுதே.....
(குயில்பாட்டு

கிறித்துவர்கள் நிறைந்த நாட்டில்
ஜாதியின் பேதமுண்டா....?....ஆ....
முகமதியர் வாழும் நாட்டில்
ஜாதியின் வாசமுண்டா...?.....ஆ....
எல்லோரும் இந்துயென்று இங்கே
ஏற்றத்தாழ்வு சொல்லிடுவான் வீணே...?
தீராத ஜாதி நோயால்
தீயாலே தேசம் வேகுதே...
(குயில்பாட்டு

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

கொம்பு முளைத்த கடவுள்

கொம்பு முளைத்த கடவுள் நீயோ
பசுவே மாடே…. – காவி
காலிகளின் கொள்கை நீயோ
பசுவே மாடே….
மதவெறியைத் தூண்டிவிட
பசுவே மாடே…. – காஞ்சி
மடத்திலேயும் உன்னை வளர்ப்பான்
எருமை மாடே….
                  (கொம்பு

பசுவதைக்குத் தடுப்புச் சட்டம்
கேட்டான் மாடே… - கேட்டவன்
காலிலேயே தோல் செருப்பாய்
நீதான் மாடே…
புனிதமென்றே உன்னைச் சொல்வான்
காவி மாடே… - உனக்கு
புல் புடுங்கி போட்டதில்லை
பார்ப்பன மாடே…
                  (கொம்பு


மாட்டுச் சாணி சாமியென்பான்
எருமை மாடே… - அதையும்
மண்டியிட்டு வணங்கி நிற்பான்
அடிமை மாடே…
மூத்திரத்தை கோமியமென்பான்
பூ நூல் மாடே… - குடித்து
மோட்சத்தை வேண்டி நிற்பான்
முட்டாள் மாடே…

                  (கொம்பு

பெண்ணே நீயும் சாதிக்க வேணுமடி

சாதிக்கும் காலமடி
பெண்ணே நீயும்
சாதிக்க வேணுமடி – அழகு
சாதனம் பூசி நின்றிடும்
சாது பொம்மையல்ல நீயடி – நீயிங்கு
பொம்மையல்ல நீயடி
       (சாதிக்கும்


கன்னியரை வதைக்கும்
கயவரைக் கண்டால்
கண்டதுண்டமாக்கடி – பெண்ணே நீயும்
கண்டதுண்டமாக்கடி
பேதையன்று உன்னை
கோழையென்று சொன்னால்
பேடித்தலாகாதடி – பெண்ணே நீயும்
பேடித்தலாகாதடி
                  (சாதிக்கும்
அச்சமட நாணம்
என்றுரைத்து உன்னை
அடக்கிட எண்ணிடுவார் – பெண்ணே உன்னை
தாழ்த்திட சொல்லிடுவார்
பெரியாரின் வழியில்
அறிவினைக் கொண்டால்
ஆண்டிட வந்திடலாம் – உலகை நீ
ஆண்டிட வந்திடலாம்
                  (சாதிக்கும்

சமையலறையில் வாழும்
அடிமைகள் என்றே
சமைத்திட சொல்லிடுவார் – பெண்ணே உன்னை
சதியாலே வீழ்த்திடுவார்
அறிவியல் இன்று
அரியனை ஏறி
ஆளவும் செய்யுதடி – அதில் நாம்
சாதனை செய்வோமடி
                    (சாதிக்கும்

வியாழன், 20 நவம்பர், 2014

என்னாத்தச் சொல்லுவேன் - அத எப்படித்தான் சொல்லுவேன்...?

நாட்டப்பத்தி எண்ணியதோ
நாதியத்து கெடக்குது...
நரவேட்டை ஆடியதோ
நாடாள வந்திருக்கு...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

சக மனுசன் கழிவகூட
அடுத்த மனுசஞ் சுமக்கது
கொஞ்சங்கூட வெக்கமில்ல
வெறுந்தரைய நக்கது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

சாராயம் வித்ததெல்லாம்
கல்வித் தந்தையாகுது
கல்விதர வக்கில்லாம
டாஸ்மாக்க தெறக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

குடிக்க கொஞ்சம் கூழுயில்ல
குடும்பம் கூடியழுகுது
கெடச்ச கூலி வாங்கியதோ
டாஸ்மாக்கில் நிக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

அடுச்சுபுடுச்சு எப்படியோ
அரசு வாத்தியாகுது....
அவன்புள்ள அங்கயில்ல
தனியாருல திக்குது
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?

அடிபட்டு விழுந்துபுட்டா
எந்த ரத்தமும் சேருது...
திருமணத்தில் மட்டும்தானே
ஜாதி சுத்தம் பாக்குது...
என்னாத்தச் சொல்லுவேன் - அத
எப்படித்தான் சொல்லுவேன்...?
-சகா

யுத்தம் செய்வோம் வா....

குற்றுயிராய்
வாழ்கிறது
மானுடம்...
உயிர்பிப்போம் வா…
தட்டியெழுப்பு
உன் காதலே
நமை வாழ்விக்கும்
.
மக்கள் சேர்
காதல் கூடு
அன்பெனும்
வெள்ளத்தை
அள்ளிப் பருகு
நீந்தியும் விளையாடு...

தயக்கம் தவிர்
உன்னிலும்
காண்கிறேன்
வெட்கம் ஓடி
பக்கம் வந்த
காரணத்தை...

மதம் பழி
ஜாதி இழி
எல்லை தாண்டு
மொழியும் கட
இது நமக்கான
யுத்தமல்ல
மானுடத்தின்
மீட்சிக்கும் தான்

நம் யுத்தத்தில்
கத்தியில்லை
ரத்தமில்லை
முத்தம் மட்டுமே
ஆயுதம்

முத்தம்
அன்பின் திறவுகோல்...
காதலுக்கும் ...
மெய்யோடு
மெய் கலக்கி
வாயோடு 
புரிவோம் வா
நல்லதொரு
யுத்தம்....

ஜாதி சுத்தமே
பண்பாடென பசப்பி
தடுத்திடுவார் நித்தம்
உன்மத்தம்
பிடித்தோருக்கு
எங்கே புரியும்
நம் முத்தம்

இருகை விரி
இறுக்கி அணை
நம்முள்
வெடித்துக் கிளம்பும்
வெப்பத்தால்
சுட்டுப் பொசுக்குவோம்
சனாதனிகளின்
ஆணவத்தை



வியர்வை பெருக்கி
சமூகத்தில் படிந்த
கலச்சார கறையை
கழுவிடுவோம் வா..

அவர்களின்
செவிப்பாறை
கிழியும் சத்தம்
நம் காதிலும்
ஒலிக்கட்டும்
ஆதலால்
இட்டுச் செல்
இன்னொரு
முத்தம்….

-சகா

வியாழன், 23 அக்டோபர், 2014

சொந்த ஊரில் பிழைக்க வக்கில்லாமல் சென்னையில் குடியேறி வாழ்க்கையைத் தொடங்கி சம்பாதித்து ஒரு நிலையை எட்டியபின் தங்களின் சொந்த ஊர் பாசத்தைக் காட்டுவதும், தன்னை வாழவைத்த சென்னையை ஏளனமாக ஏசுவதும் சென்னையைத் தவிர்த்த தமிழர்களிடம் மண்டிக்கிடக்கும் இன்றியமையாத மோசமான பழக்கங்களில் ஒன்று...
குறிப்பாக திரைத்துறையைச் சார்ந்தவர்களின் சொந்த ஊர் பாசம் மிகவும் அருவருப்பானது.... அதாவது அவர்களது சொந்த ஊர் மக்கள் மட்டுமே நல்ல மனசு கொண்ட பாசக்காரர்களாக காட்டுவதும், மற்றவர்களை மோசமானவர்களாக சித்தரிப்பதும் (குறிப்பாக சென்னை வாழ் மக்களை) பல படங்களில் காட்டிவருகிறார்....
சென்னையில் சினிமா பொழப்பு நடத்தி உயர்ந்த எவனும் தன் நன்றிக் கடனை இந்த சென்னை மக்களுக்கு செய்தானில்லை...
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருந்தது... ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலம் அந்த ஆதங்கத்திற்கு ஒரு ஆறுதலைத் தந்திருக்கிறார்கள் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட படக்குழுவினர்கள்...

என் நண்பர்களிடம் உரையாடும் போது எப்பொழுதும் சொல்வேன், சென்னையில் வாழ்வதை பெருமையாக எண்ணுகிறேன் என்று... 
மெட்ராஸ் படத்தைப் பார்த்த பிறகு நானும் ‘மெட்ராஸ்’காரன்தான் என்று உரக்கக்கூவத் தோன்றுகிறது......

நேர்பட கூட்டு...

சிக்கலான கணக்கு...
நெடுங்காலமாய்
தவிக்கிறோம்
விடைதான்
என்னவென்று
புரியவில்லை....
ஆபத்பாந்தவன் போல்
அதிரடியாய்
நீயும்
உனது பரிவாரும்
குதித்தப் பின்தான்
தூசு கிளப்புகிறது
கணக்குக் களம்...
உன் கைகள்
துரிகை தொட்டபின்தான்
ஆம்...
பொற்றாமரைக்
கரங்கள் தொட்டால்
துடைப்பம் கூட
தூரிகையாய் மாறிய
அதிசயம்
இங்குதான் நடக்கும்...

அருமை
நீ தரையில் போட்ட
கணக்கில்
மிக எளிமையாக
விடை கிடைப்பதாக
உன்னால்
வளர்க்கப்படும்
‘காவி’க் குயில்கள்
கூவுகின்றன..
அடேய்...
என்னங்கடா...?
வெற்றிடத்தில்
கூட்டல்
பெருக்கல்னு
போஸ்காட்டி
நக்கலாய்
சொல்கிறீர்கள்
கணக்கு
எளிமையென்று...
இப்படித்தான்
குதர்க்கவாதிகளின்
குரல்கள் ஆங்காங்கே
ஒலிக்கும்
நீயும் அதைக்
கேட்டிருப்பாய்...
என்றாலும்
அதைப்பற்றி
கவலைப்படாதே...
நீ போடும்கணக்கு
சரியானதுதான்
என்பதை
உலகிற்கு
புரியவை...
அதனால்
கண்ட இடத்தில்
தூசி தட்டி
போக்குக் காட்டாதே...
நீ பிடித்த
தூரிகையோடு
கூடையொன்றும்
கொண்டுவா....

கழித்தல்
இடத்திலிருந்து
தொடங்கு...
அப்பொழுது பார்
கணக்கு நேர்படும்...
-கோவை சகா

புதன், 2 ஜூலை, 2014

வென்றது கார்ப்பரேட்...! வீழ்ந்தது ஜனநாயகம்...!

நாடுமுழுவதும், பாஜவினரும் இந்துத்துவா அமைப்புகளும் பொங்கி வரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இடங்களை மக்கள் அளித்திருப்பதே அவர்களது இந்தக் கொண்டாட்டத்துக்குக் காரணம். இவர்களோடு மாற்றத்தை விரும்பிய மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.


   அவர்கள் கொண்டாடும் இந்த வெற்றி உண்மையானதுதானா? இது ஜனநாயகத்துக்குக் கிடைத்திருக்கும் உண்மையான வெற்றியா? என்பதை அலசிப்பார்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அறுதிப் பெரும்பான்மை என்பது அந்த அரசியல் கட்சிக்கும், ஆட்சி அதிகாரத்தில் அமரப்போகிறவர்களுக்கும் வேண்டுமானால் வசதியானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கலாம். ஜனநாயக அமைப்பை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் நிச்சயமாக இதுபோன்ற வெற்றிகள் உதவப்போவதில்லை.
   இது பாஜகவுக்கும் ,நரேந்திர மோடிக்கும் கிடைத்த வெற்றியாக அக்கட்சியினரும், அவரது ரசிகர்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் நிச்சயமாக இல்லை. இது, மூன்றாம் உலக நாடுகளின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக விஸ்வரூபமெடுத்து, இங்கங்கெனாதபடி எங்கும் வியாபிக்கத் தொடங்கியிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைத்த வெற்றி. அதன் பயனாய் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிக மோசமான தோல்வியை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது.
     மோடி என்ற புதிய தயாரிப்பை மிகக் கச்சதிதமாக தங்களது விளம்பர யுக்தியைப் பயன்படுத்தி பிரபலப்படுத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் வணிகத் தந்திரத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதான் இது. இந்திய மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துச் சொல்கிறார் என்றால் அப்போதே நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?
     அமெரிக்கா என்பது ஜனநாயக அரசியல் வடிவத்தின் பிரதிநிதி அல்ல. மூன்றாம் உலக கார்ப்பரேட் ஆக்டோபஸ் நிறுவனங்களின் அப்பட்டமான பிரதிநிதி. அந்த நாட்டின் அதிபர் வாழ்த்துச் சொல்கிறார் என்றால் என்ன பொருள்? கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டம் வெற்றி பெறப்போகிறது என்பதுதானே! இப்போது அது நடந்தும் விட்டது.
         ஏன் மன்மோகன்சிங்கும், காங்கிரசும் கார்ப்பரேட்டுக்குப் பிடிக்காதவர்களா என்ன? ஏன்  அவர்களை விட்டுவிட்டு இவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேள்வி எழலாம். அதற்கான பதிலை காண்பது எளிது. கடந்த பத்தாண்டுகளாக பதவியில் இருந்த காங்கிரஸ் மீது எழுந்த ஊழல் கறை படியத் தொடங்கி விட்டது. காங்கிரஸ் மீதான இந்தக் கோபம் பன்னாட்டு நிறுவனங்கள் மீது நேரடியாகத் திரும்புவதற்கு நேரமாகாது. அப்படியானால் ஏஜன்டை, அதாவது ஆட்சியாளர்களை மாற்ற வேண்டும். குஜராத்தில் அதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. “யாவாரம்” சூடு பிடிக்கவே, அடடே இவரையே நமது இந்தியா முழுமைக்குமான ஏஜென்டாக ஆக்கிவிடலாமே என கார்ப்பரேட் நிறுவனங்கள் முடிவெடுத்து விட்டன.


     ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவா பரிவாரங்களுக்கு தங்களது மறைமுக வேலைத்திட்டங்களை நிறைவேற்ற ஆட்சி அதிகாரம் வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ தங்களது வியாபாரத்தை விரிவு படுத்த உதவும் புதிய முகமுள்ள ஏஜெண்ட் வேண்டும்.
    மோடியின் முகம் அதற்குப் பரிசீலிக்கப்பட்டது. மேக்கப் டெஸ்டில் கார்ப்பரேட் ஏஜன்டாக இருப்பதற்கான ஏக களையும் அவர் முகத்தில் சொட்டுவது தெரிந்தது. விளம்பர வியூகங்கள் வகுக்கப்பட்டன. வியாபாரமும் களைகட்டியது. பங்குச் சந்தைகள் அவ்வப்போது புதிய உச்சத்தை எட்டியது மோடி என்ற முகவரின் வர்த்தக ரீதியான உத்தரவாதத்தை மேலும் உறுதிப்படுத்தியது. கார்ப்பரேட் நிறுவனங்கள் “ஆகா நமக்கான தேவதூதனைக் கண்டு பிடித்து விட்டோம்” என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டன. மோடியின் முகத்தைச் சந்தைப் படுத்தும் காரியங்கள் கச்சிதமாக நடந்தேறின. இப்போது இந்தியச் சந்தையில் தங்களுக்கான இடம் என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

“தேர்தல் திருவிழா” என்று, ஒரு ஜனநாயக நிகழ்வின் முக்கியத் தருணத்தை எந்த வெட்கமுமின்றி நொடிக்கொருதரம் கூவிக்கூவி நமது ஊடகங்கள் விற்றனவேஞ் அந்த ஜனநாயகத் திருவிழாதான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சந்தை உத்தரவாதத்தை வழங்குவதற்கான அரசியல் சாசன அடிப்படையிலான ஒப்பந்தம். அது எந்தத் தடையுமில்லாமல் இந்தியாவில் நிறேவேறி விட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது ஒரு மிகப்பெரிய சந்தையே தவிர, பன்முகச் சமூகமும், பல்வேறு தேசிய இனங்களும் வாழும் ஒரு நாடல்ல. அவர்களது அமைதி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. அந்த வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியா என்ற சந்தையை மிக லாவகமாக வளைத்துப் போட்டுவிட்டன.

       இனி, இயற்கை விவசாயம், தற்சார்புத் தன்மை, மரபணு மாற்றப் பயிர்கள் என எதையுமே நாம் எதிர்த்துப் பேசத் தேவையுமில்லை. பேசினாலும் பயன் இருக்காது.

அந்த வகையில், மிகப் பெரிய ஜனநாயக நாடு என அவ்வப்போது அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாமும் தம்பட்டமடித்துக் கொள்வோமே, அந்த மிகப்பெரிய ஜனநாயக நாட்டை, நமது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் எந்த மனத்தடையுமின்றி இருகரங்களாலும் தூக்கி கார்ப்பரேட் நிறுவனங்களின் காலடியில் வைத்து வணங்கி நிற்கிறார்கள். 

மக்கள் தனக்களித்த இந்த பரிசிற்கு கைமாறு செய்ய வேண்டுமே...? இதோ  டீசல் விலை உயர்வு, ரயில் கட்டணம் உயர்வு, சிலிண்டர் விலை இனி மாதமாதம் உயர்வு என்று மக்களுக்கு நன்மை பயக்கும் அதிரடியான நடவடிக்கைகளை அறிவித்ததின் மூலம் தனது கைமாறை திருப்பிச் செய்திருக்கிறார். இது ஆரம்பம்தான். முடிவல்ல. கார்ப்பரேட்கள் தாங்கள் நிருணயித்திருக்கும் வணிக இலக்கை எட்டும் வரை இப்படியான பல நல்ல திட்டங்களை அடுத்தடுத்து வெளியிடுவார் மோடி.  

ஆக, 200 ஆண்டுகள் போராடிப் பெற்று, 67 ஆண்டுகளாக அதைவிடக் கடுமையான போராட்டங்களோடு கட்டிக்காத்த இந்திய ஜனநாயகம் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற வில்லை என்பதுதான் நிதர்சனம்.


மொத்தத்தில் இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கிடைத்த வெற்றி என்பதால். இதனைக் கொண்டாட வேண்டியதும் அவர்களே! இதன் பின்னணியில், பன்முகச் சமூகம் வாழ்வதற்கான அமைதியான நாடாக இந்தியா நீடிக்குமா என்ற என்ற மிகப்பெரிய கேள்வி நமக்குள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காலம் கூறும் பதிலுக்காகக் காத்திருப்போம். வெறென்ன செய்ய?  

அடிமை விலங்குடைப்பாய் பெண்ணே....

அடிமையென்ற விலங்குடைத்து வருவாயடி
அடக்குகின்ற ஆணினத்தை ஆள்வாயடி
பெண்ணடிமை சொல்வோரை வெல்வாயடி
பெரியார்தான் கண்டவழி வாராயடி

                                                              (அடிமை


பிள்ளைபெறும் இயந்திரமல்ல நீயேயடி
பிதற்றுகின்ற உலகத்தையே வாழ்த்தாதடி
சமையலறை உன்னதென்று செல்லாதடி
சரித்திரத்தை மாற்றத்தானே எழுவாயடி
விஞ்ஞானம் படைப்பதோ விந்தைகளடி
விண்ணுயுர கல்வியிலே சிறப்பாயடி

                                                              (அடிமை


கல்லானாலும் கணவனென்று காணாதடி
கண்ணீரையும் கொண்டிங்கே தேம்பாதடி
தாலிதனை வேலியென்று சொல்லாதடி
தந்தவனின் அடிமையென்று கூறாதடி
விதவைக் கோலம் வேண்டாமென்று தடுப்பாயடி
விதியென்று விதிப்பவரை அழிப்பாயடி

                                                             (அடிமை


குழந்தை மணம் கொள்வோரை சாடோயடி
குற்றமதை யார்செய்யினும் கொய்வாயடி
கண்டதெல்லாம் கோயிலென்று செல்லாதடி - அங்கிருக்கும்
காலிப்பயல்களை சாமியென்றே நம்பாதடி
உன்னழனை பேணயென்று எண்ணாதடி
உள்ளழகை கொண்டிங்கே சிறப்பாயடி
                             

                                                            (அடிமை

சனி, 29 மார்ச், 2014

எழுவாய் தமிழா...

வந்தாரை வாழவைத்த தமிழா.. தமிழா.. - நீ
வாழயிங்கு இடமேயில்லை சரியா தமிழா..
ஆரியனெல்லாம் ஆகிறானே துரையாய் தமிழா
அவனைவிட நீயென்ன குறையா தமிழா... (வந்தாரை)

நற்றமிழை வளர்த்தெடுத்தோம் தமிழா தமிழா - தமிழ்
நாதியற்று போகிறதே முறையா தமிழா...?
சிங்கமென்று பேரெடுத்து வாழ்ந்தாய் தமிழா - இப்போ
சித்தெறும்பாய் போனதென்ன பாராய் தமிழா
மண்ணுலகை ஆண்டு வந்த தமிழா.. தமிழா.. - குடிக்க
மதுக்கடையில் வீழ்ந்ததென்ன தெளிவாய் தமிழா... (வந்தாரை)


பக்தியாலே சக்தியிழந்தோம் உணர்வாய் தமிழா... - பூணுல்
பாப்பானிடம் புத்தியிழந்தோம் அறிவாய் தமிழா
வடவனுக்கு அடிமையானோம் புரிவாய் தமிழா... - அந்த
வாழ்வால் மனத்தை யிழந்தோம் தேடாய் தமிழா..
சினிமாவும் சீரியலும்தான் தமிழா தமிழா... - நம்
சிந்தனையை அழிக்குறதே காணாய் தமிழா... (வந்தாரை)

ஜாதியென்றும் சமயமென்றும் பிரிந்தோம் தமிழா.. - அதனால்
சாக்கடையாய் நாறிப்போனோம் நலமா தமிழா...?
மூடமதை அழித்திடவே எழுவாய் தமிழா.. - இனத்தை
முன்னேற்ற உழைத்திடுவோம் வருவாய் தமிழா...
எச்சிப்பிழைப்பு வேண்டாமே எழுவாய் தமிழா... - இனி
ஏற்றவாழ்வு அடைந்திடுவோம் வருவாய் தமிழா... (வந்தாரை)

- கோவை சகா

(தமிழின எழுச்சிப் பாடல்)

வியாழன், 27 மார்ச், 2014

வருமானவரி ஏய்ப்பில் வீட்டின் உரிமையாளர்கள்? பரிதவிப்பில் மக்கள்


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகரத்தில் தற்பொழுது மிகப்பெரிய வருமானம் கொழிக்கும் தொழில் எதுவென்றால் வீடுகளை வாடகைக்கு விடுவதுதான். அந்தளவுக்கு அள்ளஅள்ளப் பணம் என்பதுபோல் வளங்கொழித்துக் கொண்டிருக்கிறது வீடு வாடகைக்கு விடும் தொழில். வருமானம் என்றால் சாதாரணமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி கட்டாமலேயே கொள்ளை லாபம் ஈட்டும் மாபெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

வாழவழி தேடி சென்னைக்கு இடம் பெயரும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் சென்னையில் குடியிருக்க முடியாத சூழல்தான் தற்பொழுது உருவாகி வருகிறது. அதற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்பது ஒருபக்கம் என்றால் முக்கியமான பிரச்சனை என்பது குடியிருக்கும் வீடுகளின் வாடகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருப்பதுதான்.

கடந்த சில ஆண்டுகளாகவே வீடுகளின் வாடகை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் 1000 ரூபாய் இருந்த சாதாரண வீடுகளின் வாடகை தற்பொழுது 3000, 4000 என்று அதிமாகி விட்டது.

மேற்குறிப்பிட்ட வாடகை ஒரு படுக்கை அறை (Single Bed Room House) கொண்ட வீட்டிற்குத்தான். இரண்டு படுக்கை அறை, மூன்று படுக்கை அறை என்றால் இன்னும் பல ஆயிரங்கள் கூடுதலாகிறது. இதைவிட தனி வீட்டின் வாடகையை கேட்டால் பலருக்கு பேதியாகவிடும். அந்தளவுக்கு வரைமுறை இல்லாமல் வாடகையை தாறுமாறாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்.

வீட்டின் வாடகையை அதிகமாக்கியதோடு மட்டுமல்லாமல் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை அளவிட முடியாததாக இருக்கிறது. ஒருசில வீட்டின் உரிமையாளர்கள் பல குடியிருப்புகளைக் கட்டி அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். அத்தனைக் குடியிருப்புக்கும் முறையாக மின் இணைப்பை பெறுவதில்லை.

மாறாக ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் மின் இணைப்பை வாங்கிக் கொண்டு அதையே மற்ற வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். இதனால் அதிகமாகும் மின் கட்டணத்தை குடியிருப்பவர்கள் தலையிலேயே சுமத்தி விடுகின்றனர். 1 யூனிட் மின்சாரத்திற்கு மின்சார வாரியம் விதிக்கும் கட்டணம் 2 ரூபாய் என்றால், வீட்டு உரிமையாளர்கள் 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை என்று குடியிருப்போர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். போதாதற்கு தண்ணீருக்கு கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு என்றும் பலவிதங்களில் குடியிருப்போர்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள் இந்த வீட்டின் உரிமையாளர்கள்.

இப்படி வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலமாக பலர் மாதந்தோறும் லட்சக் கணக்கில் வருமானத்தை பெறுகிறார்கள். அப்படி வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக வருமான வரிகட்டவேண்டும். வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடுபவர்கள் பலர் வருமான வரியை செலுத்துகிறார்கள். ஆனால் பல வீட்டின் உரிமையாளர்கள் முறையாக வரியைக் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

இதைப்பற்றி வருமான வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கருத்தரங்கம் ஒன்றில், ‘வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் யாரும் வருமான வரி செலுத்துவதில்லை. அப்படி வரி ஏய்பபவர்கள் முறையாக வரியை செலுத்துவார்களேயானல், நாட்டின் பொது வருமானம் அதிகரிக்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்கிற கொள்கை உருவான பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைசிங்காரச் சென்னைஎன்கிற அறிவிப்போடு தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது என்னவோ உண்மைதான். உயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்டமான உயர்மட்ட பாலங்கள் அழகியப் பூங்காக்கள் என அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரத்தின் இந்த அதிவேக வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களை ஓடஓட விரட்டுவதாக இருக்கிறது.

இந்தியாவில் உருவாகியிருக்கும் பொருளாதாரச் சிக்கல், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம்,
குடியிருப்புகளின் அதிகரிக்கும் வாடகை போன்ற பிரச்சனைகள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர மக்களுக்கு வேண்டுமானால் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாளொன்றுக்கு 50 ரூபாய் கூலிகூட இல்லாமல் வறுமையில் வாடும் பெரும்பான்மை மக்களின் நிலை என்னவாகும் என்பதே நமது கேள்வி.

சென்னையல் குடியிருப்புகளின் வாடகை பெருமளவு கூடுதலாவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடகுகடை நடத்தி கோடி கோடியாய் சுருட்டிவரும் மார்வாடி, குஜராத்தி போன்றவர்களின் படையெடுப்பும் இந்த பன்னாட்டு கம்பெனிகளில் தற்போது பெருகிவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் அதிகப்படியான ஊதியமும்தான் காரணம். சென்னைக்கு வெளிமாநிலத்தில் இருந்து கொத்து கொத்தாய் குடிபெயரும் இளைஞர்கள் 4 பேர், 5 பேர் கூட்டாக சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய் வாடகை மதிப்பு கொண்ட வீட்டை 5 ஆயிரம் என்று கொடுத்து குடியேறுகிறார்கள். மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சக்கணக்கில் ஊதியம் கிடைப்பதால், வாடகையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

அவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறையற்றத் தன்மையும்தான் இப்படி குடியிருப்புகளின் வாடகைகள் அதிகமாகி வருவதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கிறது. இப்படி வரைமுறை இல்லாமல் வீட்டு வாடகை ஏறிவருவதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது தெரியவில்லை. இதனால் ஏகக் கொண்டாட்டத்தில் திளைக்கும் வீட்டு உரிமையாளர்கள் வரி ஏய்ப்பை செய்துவருகிறார்கள்.

இவர்களை இனம்கண்டு சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்வதோடு வீட்டு வாடகைகளை முறைப்படுத்த இன்றைய ஆளும் அரசுகள் முன்வரும் என்றால் நாட்டிற்கும் நல்லது குடிமக்களுக்கும் நல்லது.