சனி, 29 மார்ச், 2014

எழுவாய் தமிழா...

வந்தாரை வாழவைத்த தமிழா.. தமிழா.. - நீ
வாழயிங்கு இடமேயில்லை சரியா தமிழா..
ஆரியனெல்லாம் ஆகிறானே துரையாய் தமிழா
அவனைவிட நீயென்ன குறையா தமிழா... (வந்தாரை)

நற்றமிழை வளர்த்தெடுத்தோம் தமிழா தமிழா - தமிழ்
நாதியற்று போகிறதே முறையா தமிழா...?
சிங்கமென்று பேரெடுத்து வாழ்ந்தாய் தமிழா - இப்போ
சித்தெறும்பாய் போனதென்ன பாராய் தமிழா
மண்ணுலகை ஆண்டு வந்த தமிழா.. தமிழா.. - குடிக்க
மதுக்கடையில் வீழ்ந்ததென்ன தெளிவாய் தமிழா... (வந்தாரை)


பக்தியாலே சக்தியிழந்தோம் உணர்வாய் தமிழா... - பூணுல்
பாப்பானிடம் புத்தியிழந்தோம் அறிவாய் தமிழா
வடவனுக்கு அடிமையானோம் புரிவாய் தமிழா... - அந்த
வாழ்வால் மனத்தை யிழந்தோம் தேடாய் தமிழா..
சினிமாவும் சீரியலும்தான் தமிழா தமிழா... - நம்
சிந்தனையை அழிக்குறதே காணாய் தமிழா... (வந்தாரை)

ஜாதியென்றும் சமயமென்றும் பிரிந்தோம் தமிழா.. - அதனால்
சாக்கடையாய் நாறிப்போனோம் நலமா தமிழா...?
மூடமதை அழித்திடவே எழுவாய் தமிழா.. - இனத்தை
முன்னேற்ற உழைத்திடுவோம் வருவாய் தமிழா...
எச்சிப்பிழைப்பு வேண்டாமே எழுவாய் தமிழா... - இனி
ஏற்றவாழ்வு அடைந்திடுவோம் வருவாய் தமிழா... (வந்தாரை)

- கோவை சகா

(தமிழின எழுச்சிப் பாடல்)

வியாழன், 27 மார்ச், 2014

வருமானவரி ஏய்ப்பில் வீட்டின் உரிமையாளர்கள்? பரிதவிப்பில் மக்கள்


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெருநகரத்தில் தற்பொழுது மிகப்பெரிய வருமானம் கொழிக்கும் தொழில் எதுவென்றால் வீடுகளை வாடகைக்கு விடுவதுதான். அந்தளவுக்கு அள்ளஅள்ளப் பணம் என்பதுபோல் வளங்கொழித்துக் கொண்டிருக்கிறது வீடு வாடகைக்கு விடும் தொழில். வருமானம் என்றால் சாதாரணமாக நினைத்துக் கொள்ள வேண்டாம். வருமான வரி கட்டாமலேயே கொள்ளை லாபம் ஈட்டும் மாபெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

வாழவழி தேடி சென்னைக்கு இடம் பெயரும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் சென்னையில் குடியிருக்க முடியாத சூழல்தான் தற்பொழுது உருவாகி வருகிறது. அதற்குக் காரணம் விலைவாசி உயர்வு என்பது ஒருபக்கம் என்றால் முக்கியமான பிரச்சனை என்பது குடியிருக்கும் வீடுகளின் வாடகை நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருப்பதுதான்.

கடந்த சில ஆண்டுகளாகவே வீடுகளின் வாடகை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்னால் 1000 ரூபாய் இருந்த சாதாரண வீடுகளின் வாடகை தற்பொழுது 3000, 4000 என்று அதிமாகி விட்டது.

மேற்குறிப்பிட்ட வாடகை ஒரு படுக்கை அறை (Single Bed Room House) கொண்ட வீட்டிற்குத்தான். இரண்டு படுக்கை அறை, மூன்று படுக்கை அறை என்றால் இன்னும் பல ஆயிரங்கள் கூடுதலாகிறது. இதைவிட தனி வீட்டின் வாடகையை கேட்டால் பலருக்கு பேதியாகவிடும். அந்தளவுக்கு வரைமுறை இல்லாமல் வாடகையை தாறுமாறாக உயர்த்திக் கொண்டிருக்கின்றனர் வீட்டின் உரிமையாளர்கள்.

வீட்டின் வாடகையை அதிகமாக்கியதோடு மட்டுமல்லாமல் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளை அளவிட முடியாததாக இருக்கிறது. ஒருசில வீட்டின் உரிமையாளர்கள் பல குடியிருப்புகளைக் கட்டி அவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். அத்தனைக் குடியிருப்புக்கும் முறையாக மின் இணைப்பை பெறுவதில்லை.

மாறாக ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் மின் இணைப்பை வாங்கிக் கொண்டு அதையே மற்ற வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். இதனால் அதிகமாகும் மின் கட்டணத்தை குடியிருப்பவர்கள் தலையிலேயே சுமத்தி விடுகின்றனர். 1 யூனிட் மின்சாரத்திற்கு மின்சார வாரியம் விதிக்கும் கட்டணம் 2 ரூபாய் என்றால், வீட்டு உரிமையாளர்கள் 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை என்று குடியிருப்போர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். போதாதற்கு தண்ணீருக்கு கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு என்றும் பலவிதங்களில் குடியிருப்போர்களை சுரண்டிப் பிழைக்கிறார்கள் இந்த வீட்டின் உரிமையாளர்கள்.

இப்படி வீடுகளை வாடகைக்கு விடுவதன் மூலமாக பலர் மாதந்தோறும் லட்சக் கணக்கில் வருமானத்தை பெறுகிறார்கள். அப்படி வரக்கூடிய வருமானத்திற்கு முறையாக வருமான வரிகட்டவேண்டும். வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடுபவர்கள் பலர் வருமான வரியை செலுத்துகிறார்கள். ஆனால் பல வீட்டின் உரிமையாளர்கள் முறையாக வரியைக் கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்றி வருகிறார்கள்.

இதைப்பற்றி வருமான வரித்துறையின் சென்னை மண்டல அதிகாரி ஒருவர் கருத்தரங்கம் ஒன்றில், ‘வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் யாரும் வருமான வரி செலுத்துவதில்லை. அப்படி வரி ஏய்பபவர்கள் முறையாக வரியை செலுத்துவார்களேயானல், நாட்டின் பொது வருமானம் அதிகரிக்கும்என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்கிற கொள்கை உருவான பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைசிங்காரச் சென்னைஎன்கிற அறிவிப்போடு தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது என்னவோ உண்மைதான். உயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்டமான உயர்மட்ட பாலங்கள் அழகியப் பூங்காக்கள் என அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகரத்தின் இந்த அதிவேக வளர்ச்சிதான் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களை ஓடஓட விரட்டுவதாக இருக்கிறது.

இந்தியாவில் உருவாகியிருக்கும் பொருளாதாரச் சிக்கல், இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம்,
குடியிருப்புகளின் அதிகரிக்கும் வாடகை போன்ற பிரச்சனைகள் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் நடுத்தர மக்களுக்கு வேண்டுமானால் பெரிய பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாளொன்றுக்கு 50 ரூபாய் கூலிகூட இல்லாமல் வறுமையில் வாடும் பெரும்பான்மை மக்களின் நிலை என்னவாகும் என்பதே நமது கேள்வி.

சென்னையல் குடியிருப்புகளின் வாடகை பெருமளவு கூடுதலாவதற்கு காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அடகுகடை நடத்தி கோடி கோடியாய் சுருட்டிவரும் மார்வாடி, குஜராத்தி போன்றவர்களின் படையெடுப்பும் இந்த பன்னாட்டு கம்பெனிகளில் தற்போது பெருகிவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் அதிகப்படியான ஊதியமும்தான் காரணம். சென்னைக்கு வெளிமாநிலத்தில் இருந்து கொத்து கொத்தாய் குடிபெயரும் இளைஞர்கள் 4 பேர், 5 பேர் கூட்டாக சேர்ந்து 2 ஆயிரம் ரூபாய் வாடகை மதிப்பு கொண்ட வீட்டை 5 ஆயிரம் என்று கொடுத்து குடியேறுகிறார்கள். மென்பொருள் நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சக்கணக்கில் ஊதியம் கிடைப்பதால், வாடகையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

அவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறையற்றத் தன்மையும்தான் இப்படி குடியிருப்புகளின் வாடகைகள் அதிகமாகி வருவதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கிறது. இப்படி வரைமுறை இல்லாமல் வீட்டு வாடகை ஏறிவருவதை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பது தெரியவில்லை. இதனால் ஏகக் கொண்டாட்டத்தில் திளைக்கும் வீட்டு உரிமையாளர்கள் வரி ஏய்ப்பை செய்துவருகிறார்கள்.

இவர்களை இனம்கண்டு சட்டப்படி நடவடிக்கையை மேற்கொள்வதோடு வீட்டு வாடகைகளை முறைப்படுத்த இன்றைய ஆளும் அரசுகள் முன்வரும் என்றால் நாட்டிற்கும் நல்லது குடிமக்களுக்கும் நல்லது.

மாடும் பொண்ணும் ஒன்னா...?



மாடும் பொண்ணும் ஒன்னா
மதிக்கறான்னு சொன்னா
எங்கள ஏம்மா மொறைக்கற
எதுக்கு இப்ப வெறுக்கற... (மாடும்)

மாடு போகும் பாதையறிய
கொம்பு மேல சலங்க...
உன்ன மாட நெனச்சதால
காலில் போட்டான் ச(வி)லங்க...

கொட்டடியில் கட்டத்தானே
மாட்டு மூக்கில் கயிறு - உன்ன
சமையல் கட்டில் தள்ளத்தானே
மஞ்சத் தாலி கயிறு... (மாடும்)


பாரமிழுக்கும் மாடும் படும்
அடிகள் அங்கே நூறு... - உன்ன
புள்ளபாரம் சுமக்க வெச்சு
அடிமையாக்குறான் பாரு...

செக்கிழுக்கும் மாடுகூட
ஓய்வெடுக்கும் பாரு....
குடும்ப செக்கில் மாட்டிக் கொண்டால்
உனக்கு ஓய்வு ஏது...? (மாடும்)


-கோவை சகா

(பெண்ணடிமை ஒழிப்புப் ‘பா’)

சனி, 22 மார்ச், 2014

பச்சையே மேல்...

மகிழ்ச்சியான தருனமிது...
இந்நேரத்தில்
அங்கே என்ன முனகல்...
கொஞ்சம் 
உரக்கச் சொல்லுங்கள்...

ஓ... 
அப்படியா...? 
ஆம்...
இது அரசியல் தான்...
இல்லையென்று
சொன்னவர் யார்...?



நான்
உங்களைவிட
உரத்துச் சொல்லுகிறேன்
அரசியல்தான்...
இது பச்சை அரசியல்தான்...

ஆனால்,
நீங்கள் நடத்திக் காட்டிய
துரோக அரசியலைவிட
பச்சை அரசியல்
பன்மடங்கு உசத்தியென்பேன்...

-கோவை சகா

(பேரறிவாளன் - சாந்தன் - முருகன்- நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த போது எழுதியது...)

வார்த்தையைத் தேடுகின்றேன்...

கண்ணில் நீர்க்கோர்க்கிறது...
வார்த்தை திக்கித் திணறுகிறது...
இனம்புரியாத ஒரு மவுனத்தால்
மூச்சும் திணறுகிறது...
துக்கத்தினால் அல்ல...
மகிழ்ச்சியினால்...

அநீதியின் கயிறறுபட
உண்டான மகிழ்ச்சி இது...



மூவரின் தூக்கை
அரசியல் குரூரத்தோடு
எதிர்நோக்கியிருந்த
கா..க..களின்
மூக்கறுப்பட்ட
கதைகேட்டு எற்பட்ட
உள்ளக்களிப்பால்
எழுந்த மகிழ்ச்சி இது...

இப்பொழுது
வார்த்தையைத் தேடுகின்றேன்...

வசைபாட அல்ல...
வாழ்த்துப்பா பாட...
இத்தீர்ப்பால்
நெறியைக் கையாண்ட
நேர்மை நீதிமான்களை
பாராட்டிட...

ஆம்... நான்
அந்த வார்த்தையைத்தான்
தேடுகின்றேன்...
நீதிமன்றத்தில்
வலிமையான வார்த்தையால்
வழக்காடிய வழக்குரைஞர்களுக்கு
நன்றி பாராட்ட..


மக்கள் மன்றத்திற்கு
உளமோடும்..
உணர்வோடும் போராடிய
மனித நேயர்களை
வலுவுட்டி பாட
வார்த்தையைத் தேடுகின்றேன்...


அரசின் அடக்குமுறையை
மயிராகக் கருதி
உயிராயுதம் ஏந்திய
செங்கொடிக்கு
நினைவுப் பா பாட
வார்த்தயைத் தேடுகின்றேன்...


மகனே என்று பாராமல்..
நீதிக்காய்...
நெடும்பயணம்
சலிப்பின்றி
இன்றும் நடந்திடும்
எம் அன்னை
அற்புத்த்தாயை
ஆரத்தழுவி
இன்பப் பா பாட
வார்த்தையைத் தேடுகின்றேன்...



தேடுவேன்..
தேடிக்கொண்டே இருப்பேன்...
அந்த இருப்புக்கூட்டின்
கதவு உடைபட
மூன்று சிறுத்தைகளும்
வெளியேறும் நாள்வரை....

-கோவை சகா

(சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய போது எழுதிய கவிதை... )

வெள்ளி, 21 மார்ச், 2014

கொம்பு முளைத்த கடவுள்...

கொம்பு முளைத்த கடவுள் நீயோ
பசுவே மாடே - காவி
காலிகளின் கொள்கை நீயோ
பசுவே மாடே...
மதவெறியை தூண்டிவிட
பசுவே மாடே - காஞ்சி
மடத்துலேயும் உன்னை வளர்ப்பான்
எருமை மாடே... (கொம்பு)

பசுவதைக்கு தடுப்புச் சட்டம்
கேட்டான் மாடே - கேட்டவன்
காலிலேயே தோல் செருப்பாய
நீதான் மாடே....
புனிதமென்றே உன்னை சொல்வான்
எருமை மாடே - பார்ப்பான்
புல் புடுங்கிப் போட்டதில்லை
நிசந்தான் மாடே... (கொம்பு)

மாட்டுச் சாணி சாமியென்பான்
எருமை மாடே - அதையும்
மண்டியிட்டு வணங்கி நிற்பான்
எருமை மாடே....
மூத்திரத்தை கோமியமென்பான்
பூணுல் மாடே - குடித்து
மோட்சத்தை வேண்டி நிற்பான்
முட்டாள் மாடே... (கொம்பு)
-கோவை சகா
(பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பார்ப்பனிய காவிவெறியர்கள் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்த (2002ஆம் ஆண்டு) சமயத்தில் எழுதிய பாடல் அல்லது கவிதை...)

சனி, 8 மார்ச், 2014

நாங்கள் ஆள்வோம்...(மகளிர் தின விடுதலைப் பா)





போதும் 
நிறுத்துங்கள்..
உங்களின் 
சம்பிரதாய 
வாழ்த்துகள்
தேவையில்லை
எங்களுக்கு...

வாயளவில் நீங்கள்
வாழ்த்துவதால்
எங்களைப்
பீடித்திருக்கும்
அடிமைத்தனம்
அகன்றிடுமோ...?

முகநூலில்
முக்கிமுக்கி
விஷ் பண்ணுவதைவிடுத்து
உங்களின் வீட்டை
ஒருநாளாவது
வாஷ் பண்ணுங்கள்
எங்களின் வேதனை
புரியும் உங்களுக்கு....

சக மனுசியாய்
உங்கள் தாயை..
என்றாவது
ஒருநாள்
பார்த்ததுண்டா...?

அப்பா வந்தாரா...?
போனாரா..? என்று
பவ்யம் காட்டும் நீங்கள்,
அம்மா எங்க போச்சு...?
அம்மா வந்துச்சா...?
என்று இன்றைக்கும்
அஃறினையாகத்தானே
அழைக்கிறீர்...

ஆசையும் அன்பும்
சொட்டச் சொட்ட
எங்கள் மீது
காதல் பானம் வீசுகிறீர்
மகிழ்ச்சி...
எப்பவாவது
பெருமைப்பட்டதுண்டா
உங்கள் சகோதரியின்
காதலைப் பற்றி...?

இந்த
மகளிர் தினத்திற்காவது
உங்கள் வீட்டுப்
பெண்களுக்கு
வாழ்த்துச் சொன்னீர்களா...?

பிறகெதற்கு
சடங்கிற்காக
பொதுவெளியில்
வாழ்த்துச் சொல்லும்
சம்பிரதாயம்...?
குப்பையில் போடுங்கள்...
உங்கள் வாழ்த்துகளை
நாங்கள் வேண்டுவது
அதுவல்ல...

வளரும்வரை தகப்பன்..
வளர்ந்தபின் சகோதரன்..
திருமணம் தொடங்கி கணவன்..
சாகும் வரை மகன்...
போதும்... போதும்...
சிறைபட்டு நாங்கள்
சிதைந்தது போதும்...
நாங்கள்
வாழ வேண்டும்...
இனி எங்களுக்காக
நாங்கள்
வாழ்ந்தாக வேண்டும்...

சுயமரியாதையோடு
சுதந்திரக் காற்றை நாங்கள்
சுவாசிக்க வேண்டும்...
சுயசிந்தனை எங்களுக்கு
வந்துவிட்டது...

இனி...
உங்களின்
வர்ணணைக்கு
மயங்கியும்..
வசவுக்கு
மருகியும்..
மந்தியாய் வாழமாட்டோம்...

இனி...
நீங்கள் காட்டும்
ஷாப்பிங்
ஷால்ஜாப்க்கு
சலாம் போடமாட்டோம்...

இனி...
எங்களை ஜாதி-மத குறியீடாக
உங்களால்
வளர்க்க முடியாது...
பண்பாட்டுச் சின்னமாய்
எங்களை மாற்றாதீர்
உங்களின்
பாலியல் வக்ரம்
எங்களுக்கு
புரிந்துவிட்டது...

நாங்கள்
விழுதுகள்...
ஆம்...
நீங்கள்
பெண் வழிச்
சமூகத்தின்
எச்சங்கள்...

இதை
பெரியாரும்
அம்பேத்கரும்
மார்க்சும்
டார்வினும்
சொல்லிச்
சென்றிருக்கிறார்கள்...

சந்தேகமிருந்தால்
மானுட வரலாற்றை
பின்னோக்கிப் பாருங்கள்...
போதாதென்றால்
விஞ்ஞானிகளையும்
மருத்துவர்களையும்
கேட்டுத் தெளியுங்கள்...

மதிமயங்கி
வீழ்ந்திருந்த நாங்கள்
விழித்தெழுந்தோம்...
உங்களை ஈன்ற
நாங்கள்
சொல்கிறோம்...
உங்களுக்கான
ஒரு நாளைத்
தேடிக்கொள்ளுங்கள்...

ஆம்...
ஆடவர் தினமொன்றை
நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
உங்களுக்கு
வாழ்த்துச் சொல்ல
நாங்கள்
வரிசைகட்டுகிறோம்...

ஏனெனில்
நாங்கள்
எங்களுக்காய்
வாழப்போகிறோம்...
உலகை
ஆளப்போகிறோம்...

-கோவை சகா


வெள்ளி, 7 மார்ச், 2014

ஏ...மஞ்சள் பிசாசே...

தயவு செய்...
என்னை விட்டுவிடு
நான் 
நானாக வேண்டும்...
தயைகூர்ந்து 
என்னை விட்டு 
தள்ளி நில்...

ஏன் 
எனைத் தொற்றித் திரிகிறாய்...?
காதிலும்.. மூக்கிலும்..
கழுத்திலும்..
சிலநேரம்
தலையிலும் 

இடுப்பிலுமாய்
என் மீது 
தாவிக்கொள்கிறாய்...

என் மீது மட்டுமா...?
என் அம்மா...
அக்கா.. தங்கை...
சித்தி.. அத்தை..
சிநேகிதி...
அவ்வளவு ஏன்...
சாகக் கிடக்கும்
எதிர்வீட்டு கிழவியென
என் இனத்தின் மீதே
தொற்றுநோய் போல்
தொற்றித் திரிகிறாய்...

உன்னால்
நாங்கள் மதிப்புற்றோம் என்று
இத்தனை நாள்
மதியற்று கிடந்தோம்...
இப்பொழுது தான்
நான் தெளிவுற்றேன்
கேவலம்
உலோகமான
உனக்கிருக்கும் மதிப்பில்
மயிரளவுகூட
உயிருள்ள எங்களுக்கு
கிடையாதென்று...

இந்த வெட்கக்கேட்டை
சொல்கிறேன் கேள்...
நான் கற்ற கல்வியையோ
கலைத்திறனையோ
ஒருபோதும் 
பெருமையாக
கருதினேனில்லை...
மாறாக
மண்ணில்
மக்கிக்கிடக்கும் உன்னை
பெருமதிப்பாக எண்ணினேன்..

எதையும்
எதிர்க்க துணிந்திருந்த
எங்களை 
புலியோடு
ஒப்பிட்ட காலம்
மலையேறிவிட்டது...
இப்பொழுதெல்லாம்
எவருக்கும் 
புறமுதுகையே
காட்டி நிற்கிறோம் 
அடிவாங்க...

ஏன் தெரியுமா...?
நாங்கள்
அடிபட்டு மிதிபடுவதைக்கூட
பொறுத்துக் கொள்வோம்...
ஆனால்...
எங்கள் மீது
தொற்றியிருக்கும்
உனக்கெதாவது
சேதாரம் வந்துவிட்டால்
நாங்கள் என்ன செய்வது
என்ற கவலைதான்...

முன்னர்...
எங்கள் தந்தை
அடுத்து அண்ணன்
தாமதமாக தம்பி
கைபிடித்த கணவன் என்று
எவரடித்தாலும்
நாங்கள் துணிவோடு 
புறமுதுகிட்டே
வாங்கிக் கொள்கிறோம்...

இன்னும் சொல்கிறேன் கேள்...
இப்பொழுதெல்லாம்
ஒரு கிராமா...?
இரு கிராமா..?
எங்கள் மேல்
எத்தனை கிராமாக
நீ இருந்தாலும்
சிரமம் பார்க்காமல்
இழக்கிறோம்..
உன்னையல்ல
எங்கள் உயிரை...


சில நேரங்களில்
நாடகம் பார்த்து
களைப்பாகும் போது
செய்தியும் பார்ப்போம்..
உலகறிவை பெறவல்ல
உன் மதிப்பு
கூடியதா...? குறைந்ததா..?
என்பதை அறிய...

சரியான 
துணை கிடைக்காமல்
திருமணம் தடைபட்ட
காலம்போய்
நகையில்லாமல்
தடைபட்ட
எங்களின் 
திருமணங்கள் தான்
அதிகம்...

நாடும் வீடும்
நாசமாய் போனாலென்ன
எங்களுக்குத் தேவை
நகையும் நட்டும் தான்
என்று மறை கழண்டு
உன்மத்தம் பிடித்தழைகிறோம்...

எங்களில் சிலர் 
உனை அணிந்து
ஊரில் காட்டும்
பகட்டினால்
ஏழைகளின்
வயிறெரிந்ததை
நாங்கள் 
எங்கே கண்டோம்...?

எத்தனை விதமாய்
உனை அணிந்தும் 
மகிழ்ச்சியில்லை.
எப்படி வரும்...?
அதற்குள் எவளாவது
புதிதாய் மாட்டிவந்து
எங்கள் வயிற்றெரிச்சலைக்
கட்டிக்கொள்கிறாள்...


இவையெல்லாம்
எங்கள் வாழ்வை
சிந்தனையை
சிதறடிக்க 
நீ செய்த 
சூழ்ச்சி என்பதை 
இப்பொழுதுதான் 
புரிந்தது...

இனியும்
உனக்கடிமையாகி
உனை அணிந்து
பகட்டாய் மின்னும்
பதுமைகளாய் இனியும்
பவனி வருவோமென்று 
பவிசுகாட்டாதே...

இருண்டிருந்த 
என் அறிவுக் கண்ணை
பெரியார் என்னும்
பெருமகன் திறந்திட்டார்...
இனி நான் மட்டுமல்ல
என் இனமே
நடமாடும்
நகைமாட்டிகளாய்
உனை அணிந்து
வலம்வர விடமாட்டேன்...


ஏ.. மஞ்சள் பிசாசே
இப்பொழுது
உன்னை எச்சரிக்கிறேன்..
மரியாதையாக
என்னைவிட்டு 
விலகிச் செல்...
மீறினால்...
நீ தோண்டப்படும்
இடத்திலேயே
புதைக்கச் செய்வேன்...

அறிவோடும்
ஆளுமையொடும்
உலகை வெல்ல
புரட்சிப் பெண்ணாய் 
புறப்படுகிறேன்...
பெரியார் தந்த
அறிவாயுதத்தின்
துணையோடு...

- கோவை சகா

(மகளிர் தினத்திற்காக தங்க நகையை வெறுத்தொதுக்கும் பெண்ணின் கற்பனையில் ஒரு கவிதை முயற்சி )