வெள்ளி, 12 ஏப்ரல், 2019

கிளிகளின் காதலன் கேமிரா சேகரோடு ஒரு உரையாடல்

சென்னை, ராயப்பேட்டை, பாரதி சாலையில் அமைந்துள்ளது அந்த கிளிகளின் காங்கிரீட் சரணாலயம். அந்த பழங்கல கட்டடத்தை அப்படித்தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு காலையும் மாலையும் கிளிகளால் சூழப்பட்டிருக்கும். கேமரா ஹவுஸ் என்ற பெயரில் கேமரா பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வரும் கேமரா சேகர், தனது கேமரா காதலைக் கடந்து, கிளிகளின் காதலனாக கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் அறியப்படுகிறார். அவருடன் நாம் மேற்கொண்ட ஒரு சிறப்பு நேர்காணல். 

எங்களுடைய வாசகர்களுக்கு உங்களைப்பத்தி சொல்லுங்களேன்.
நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். சொந்த ஊர் தர்மபுரி. அப்ப நான் 6வது படிச்சுட்டு இருந்தேன். அப்பா  என்னை தொழில்ல சேர்த்து விட்டதால மேற்கொண்டு படிக்க முடியலை. இதை போக்க நிறைய படிக்க ஆரம்பிச்சேன். குறிப்பா மெக்கானிசம் சார்ந்த நூல்கள். இதனால எங்க ரைஸ் மில்லுல என்ன பிரச்னை வந்தாலும்  நானே சீர் செய்யத் தொடங்கினேன். இப்படி ஆரம்பிச்சது டிவி, ரேடியோ, டேப்ரெக்கார்டர், விசிஆர்னு வளர்ந்தது. அதேசமயத்துல  தொழிலை நிர்வகிக்கவும் கத்துக்கிட்டேன். அப்பாவோட சின்ன ஒரு மனவருத்ததுல நான் சென்னைக்கு வந்து 35 வருசம் ஆகுது. அப்போ சென்னைல கேமரா ரிப்பேர் பண்றவங்க மூன்று பேர் தான் இருந்தாங்க. ஏன் நாம இந்த தொழில எடுத்து செய்ய கூடாது என்ற ஒரு அர்வம் வந்துருச்சு.  என்னால இந்த கேமரா சர்வீஸ் பண்ற வேலையில் வெற்றிபெற முடியாதுன்னு கிண்டல் செய்தவர்கள் நடுவே ஒரு பேசப்படற ஆளா வரனும்னு விடியறதே தெரியாம உழைச்சேன். ஒரே வருசத்துல என்னுடைய என்னுடைய பேரு பிரபலம் ஆகிடுச்சு. நானும் பெரிய ஒரு மெக்கானிக்குன்னு ஒரு அந்தஸ்த்துக்கு வந்துட்டேன். அப்புறம் இந்த சமுதாயத்துக்கு அந்த தொழில்ல எவ்ளோ வருவாய் ஈட்டறோம். சமுதாயத்துக்கு நம்மாளால என்ன செய்ய முடியும் அப்படியென்ற ஒரு குறிக்கோளோட அது இன்னொர் ஒரு சேவையா செஞ்சேன்.
உங்களுக்கு இந்த பறவைகள் மீதான காதல் எப்போது வந்தது?
       எனக்கு சினன வயசுல இருந்தே உயிரினங்கள் மேல அன்பு இருந்தது. இந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் சுவரச்   சுத்தி அரிசி, தண்ணி வச்சிருவோம். நாள் முழுவதும் சிட்டுகுருவி, அனில், புறா சாப்ட்டுட்டு இருந்தது. ஆரம்பத்துல ஒரு கிலோ வரைக்கும் அரிசி வச்சிட்டு இருந்தோம். 2004 ஆம் ஆண்டு சுனாமி வந்தபொழுது நாலோ அஞ்சோ கிளிகள் வந்தாங்க. ஒரே வருசதுல ஆயிரகணக்கான கிளிகள் வர அரம்பிச்சிடுச்சி. அப்படி வருகிற கிளிகள் வீட்டு சுவத்துல மட்டும்தான் ஒக்காந்து சாப்பிடும். எடம் பத்தாதுனால குறுக்க ஒரு 15 கட்டைய வாங்கி போட்டோம்.  அதுக்கு பிறகு 2000 கிளி உக்காந்து சாப்பிடுவாங்க. அவிங்க போனதும் அடுத்த  இரண்டாயிரம் கிளிகள் வரும். இப்படி ஒரு நாளைக்கு ஏறக்குறைய சீசனுக்கு தகுந்தமாதிரி 3000 கிளி வரும். வெய்யில்னா அவுங்களுக்கு ஆகாது. மழைன்னா அவுங்களுக்கு ரொம்ப புடிக்கும். மழைகாலத்துல 4000, 5000 கிளிகள் வர ஆரம்பிச்சிடும்.  காலைல 5 மணிக்கு எழுந்து உணவை தயார் பண்ணி 6 மணிக்குள்ள வச்சிடனும். 6 லிருந்து ஒரு 7 மணிக்குள்ள சூரியன் உதயம் ஆகுறதுக்குள்ள சாப்ட்டுட்டு போய்டுவாங்க. புயல் நேரங்களில் காலைல 6 மணிக்கு  வரவங்க மாலை 6 மணி வரைக்கும் இங்கேயே இருப்பாங்க. அந்த மாதிரியான நேரங்களில் நாள் முழுதும் அவங்களுக்கு வேலை செய்யனும்.

பரபரப்பான சூழல்ல இந்த பறவைகளுக்கு எப்படி உங்களால  நேரம் ஒதுக்க முடிகிறது?
அன்பு தான் வாழ்க்கை லிஷீஸ்மீ வீs றீவீயீமீ. பணம் வாழ்க்கை கிடையாது. பணம் தேவை. ஆனா பணமே வாழ்க்கை இல்லை. அதனால நம்ம சம்பாதிக்கற பணத்துல எதோ ஒரு உயிரினங்களுக்கோ நம்ம ஒரு சேவை செய்யனும். இப்ப வந்து நான் அப்படிதான் பண்ணிட்டு இருக்குறேன். என்னுடைய வருமானத்துல 40 விழுக்காடு ஒதுக்கி சேவையா செய்யறேன். அதே நேரத்துல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான  உதவிகளை செய்துட்டு வரேன். கிளிகளின் உணவுப் பொறுத்தவரை   இன்றைக்கு 60 கிலோ வரைக்கும் செலவாகுது. அதுவே மழை மற்றும் புயல் காலங்களில் ஒரு நாளைக்கு 75 கிலோ வரைக்கு செலவாகும். குறிப்பா சொல்லனும்னா ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய ஒதுக்கனும். அப்படி கஷ்டமான நேரத்துல பொதுமக்கள் உதவி பண்ணுவாங்க. நான் ஒரு கேமரா ரிப்பேர் அதனால அதுல வர்ற வருமானத்த வச்சிதான் இவங்களுக்கு செலவு பண்ணிட்டு வரேன். அன்பு தான் வாழ்க்கைங்கறதால மகிழ்ச்சியா செஞ்சிட்டு வருகிறேன்.
இந்த மாணவர்களுக்கு உதவற நீங்க அவர்களிடம் பறவைகளின் நேசிப்பைபற்றி ஏதாவது சொல்லி இருக்கீங்களா?
கண்டிப்பா ஏன்னா அன்பை விதைச்சாதான் வருங்கால மாணவர்களுக்கு அன்புன்னா என்னான்னு தெரியும். சில தாய் தந்தையர் குழந்தைகளுக்கு அன்பை சரியா போதிக்காததுனால தான் சில ஜெனரேசனுக்கு அன்புன்னா என்னான்னு  தெரியாம போயடுது. அதனால தான் வறவங்களுக்கு அந்த அன்பை நேசிக்கறது எப்படின்னும், கிளிகளுக்கு சேவை செய்வது போன்ற எண்ணத்தையும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுவேன். இந்த சமுதாயத்துக்கும் இயற்கைக்கும் உங்களால என்ன சேவை செய்ய முடியுமோ அது செய்யுங்கள் அப்டின்னு சொல்லும் போது சில மாணவர்கள் பின்பற்றுகிறார்கள்.  

இங்கு வர கிளிகளை இனம் காண முடியுதா. கிளிகள்லேயே பல வகைகள் இருக்கு அந்த வகைகளை பார்க்க முடியாது?
பொதுவா எடுத்தீங்கண்ணா ஆண் பெண் இருபாலர் இருக்காங்களே கிளிகள்ல. ஆணுக்கு கழுத்துல ஒரு வளையம் இருக்கும். இந்த கருப்பு சிவப்பு வளையம் ஓராண்டுக்கு அப்பறம் தான் வரும். ஓராண்டுக்கு முன்னால அது என்ன இனமுன்ன கண்டு பிடிக்க முடியாது. பெண் கிளிக்கு அந்த இது இருக்காது. மத்தபடி கிளிகளில் மூனு, நாலு  வகையான கிளிகள் இருக்கு. அலெக்சாண்டிரியான்னு ஒன்னு இருக்கு. அலெக்சாண்டிரியா அரிதான இனம். அதனால தான் இந்த அலெக்சாண்டர் இனத்தை புடிச்சு வெளிநாடுகளுக்கு எடுத்துட்டு போறாங்க. அதனால்தான் அரசு இந்த வகை கிளிகளை பிடிப்பதற்கு தடைவிதித்திருக்கிறது. கிளிகளை வளக்ககூடாது வீட்டுல இறக்கையை வெட்டி அடிமை மாதிரி வச்சிக்க கூடாதுன்னு பொது மக்களுக்கு சொல்லனும். 
கிளிகள் பத்தி பேச ஆரம்பிச்சாலே, அவர்கள், இவர்கள்னு மரியாதையா குறிப்பிடுறீங்க எப்படி இந்த உணர்வு வந்தது?
எல்லாரும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க.  அது என்ன உயிரினமா இருந்தாலும் மரியாதை தரனும்னு சின்ன வயசிலே இருந்தே பழகிருச்சு. ஒரு சின்ன பையனா இருந்த கூட வா ராஜா என்ன ராஜா சௌக்கியமா? நல்லா படிக்கிறியா? அப்படின்னு பேசியே பழகிட்டோம். அதனுடைய தொடர்ச்சிதான் கிளிகளை குறிப்பிட்டு சொல்லும் போதும் அப்படி பேசத் தோன்றுகிறது.
கிளிகள் சுதந்திரமா இருக்கறத தான் நீங்கள் விரும்புவீர்கள். இங்க பார்தத சில கிளிகள் கூண்டுக்குள்ள இருக்குது. அதுக்கு என்ன காரணம்?
கிளிகள் வந்து சுதந்திர பறவைகள். அதை வாங்காதீங்க. கூண்டுல வெக்காதீங்க உங்கள ஒரு 4 அடி கூண்டுல ஒரு 4 அடி கூண்டுலஒரு நாள் திuறீறீ-ஆ உங்கள நிக்க வெச்சா உங்களுக்கு என்ன மாரி தண்டணையோ எவ்ளோ சிரமம் இருக்குமோ அதே போல தான் கிளிகளுக்கும். அது அழகா இருக்குன்றதுக்காக நீங்க விலை குடுத்து வாங்கி அதோட இறக்கைய கட் பண்ணி உங்களுக்கு அடிமை மாதிரி வச்சிக்கிட்டு அதை நடக்க சொல்றதும், பேச சொல்றதும், மேல ஏறிக்கச் சொல்றதும் அதெல்லாம் தவறு. அதை வந்து செய்யாதீங்க்ன்னு ஒவ்வொரு பத்திரிகை பேட்டிலையும் சொல்றதுனால சிலர் மனம் திருத்தி கூண்டோட இங்க வந்து வச்சிட்டு போய்டுவாங்க. இவை எல்லாமே பறக்க கூடாது என்பதற்காக இறக்கையை வெட்டி இருப்பாங்க. இப்போ அந்த இறக்கை வளராது. அதனால அவங்கள குளிக்க வெச்சிட்டு அந்த வெட்டுன இறக்கையெல்லாம் புடுங்கி போட்டுட்டா ஒரு நாலு மாசத்துல வளர்ந்திடும். அப்புறம் திறந்துவிட்டா சுதந்திரமா பறந்து போய்டுவாங்க. இறக்கை வளருகிற வரைக்கும் அவங்க கூண்டுக்குள்ளதான் இருக்கனும். ஏன்னா பூனை உள்பட சிலவற்றில் அவர்களை பாதுகாக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்புக்கா அப்படி வைத்திருக்கிறோம்.  இறக்கை வளர்ந்ததும் அவங்களோட பிறப்புரிமையை தேடி பறந்திடுவாங்க.


இந்த கிளி வளர்ப்புல உங்க குடும்பத்துல இருக்கறவங்களோட பங்களிப்பு எப்படிங்க?
இது கிளி வளர்ப்பு இல்லை, அவங்களுக்கு சேவை செய்யறது. இப்போ நான் எங்கேயும் போக முடியாது. எப்படி கிளிகள கூண்டுல வச்சி வளர்க்கறாங்களோ அதேமாதிரி இங்க வருகிற எல்லா கிளியும் என்னை இந்த வீட்டு கூண்டுல வச்சிட்டாங்க. காலை 5 மணியில் இருந்து 6 மணிவரை  இங்க இருக்கனும். அதேமாதிரி சாயங்காலம் 3.30-ல இருந்து 7.00 மணி வரை இங்க இருக்கனும் அதனால எங்கேயும் போக முடியாது. நான் ஒரு பிஷீusமீ அரஸ்ட் மாதிரி தான் இப்போ இருக்கேன். நான் எங்கியாவது நல்லது கெட்டதுக்கு ஊருக்கோ ஒரு நாள் தான் போவேன். அப்போ வந்து வீட்டுல இருக்கவங்க பாத்துக்குவாங்க. வீட்டு உதவி இல்லன்னா எதுவும் செய்ய முடியாது. இப்பவே என்னோட சின்ன பேத்திகளுக்கு அன்பை விதைக்கிறேன். நாளைக்கு நான் இல்லனா கூட அவங்க செய்யனும்ன்ற ஆர்வத்தை தூண்டி அன்பை விதைச்சிருக்கேன். 
உங்களுக்கு பிறகு இந்த கிளிகளை நேசிக்கறதுக்கு என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்?
நான் இப்ப இருக்குறது வாடகை வீடுதான். 25 வருசமா நான் இங்க இருக்கேன்னா முதல்ல இந்த உரிமையாளருக்குத்தான் நன்றி சொல்லனும். ஏன்னா ஒரு எடத்துல 25 வருசம் வெக்கறதே பெரிய அபூர்வம். இப்ப இந்த இடத்த அவங்களுக்குள்ள பிரச்சனைகள் விக்கனுன்னு முடிவெடுத்திருக்கிறார்கள். அதனால இந்தப் பணி வந்து தடைபடக்கூடாதுன்னு ரொம்ப ஆதங்கத்தோட இருக்கேன். எப்படியாவது நாம தொடங்கிய இந்த பணியை தொடர்ந்து செய்யனும், இந்த பறவைகள் வந்து ஏமார்ந்து போய்ட கூடாதுன்னு. என்னிடம் இப்போ ஒரு நாலாயிரம் கேமராக்கம் சேகரிச்சு வெச்சிருக்கேன். அது விலைமதிக்க முடியாத பொக்கிஷம் 200 வருசத்துக்கு முன்னாடி வந்த கேமரா உள்ளிட்ட பல அறிய பொருள்கள் இருக்கு. அதை அரசு வாங்கிட்டு, இந்த இடத்தை வாங்கி சேவையை தொடர்வதற்கு உதவி பண்ணாங்கன்னா நல்லா இருக்கும். அரசோ  இல்ல தன்னார்வ தொண்டு நிறுவனமோ£, பெரிய பணம் படைத்தவர்களோ யாரா இருந்தாலும் எனக்கு உதவி பண்ணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக