ஞாயிறு, 18 நவம்பர், 2018

நூறு தாய்க்கு இணையாய் ஒரு நூரி



தன் பாலினமாற்றத்தை உணர்ந்த நாள் முதல் தனித்தே வாழ்ந்து வந்த நூரியின் அரவணைப்பில் இன்றைக்கு 50 குழந்தைகள் வளர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்லாது ஆண்கள், பெண்கள் என்று 100க்கும் மேற்பட்டவர்களை தத்தெடுத்து தாயாக உருவெடுத்திருக்கிறார். திருநங்கையாக இருப்பதால் சமூகம் ஒதுக்குகிறது என்று புலம்பும் சராசரி திருநங்கைகளுக்கு நடுவே முன்மாதிரியாக திகழ்ந்து சமூக அங்கீகாரத்துடன் பல்வேறு தளங்களில் தனக்கென ஓரிடத்தை தக்க வைத்திருக்கும் திருநங்கை நூரி தானொரு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் என்பதை மிகவும் துணிவுடன் கூறி வருபவர். தன்னம்பிக்கைக்கு இலக்கணமாக திகழ்ந்துவரும் அவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணல். 

கேள்வி : உங்களின் இளமைக்காலம் பற்றி கூறுங்கள்? 

சிறுவயதிலேயே என்தாயார் இறந்துவிட என்னுடைய அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் என்னுடைய 13வது வயதில் எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். நடை, பாவனை, கூச்சம், வெட்கம் என்று பெண்மைக்குரியதாக கூறப்படும் அடையாளங்கள் எனக்குள் நிகழ்ந்தது. இதை மிகப்பெரிய அவமானமாக கருதிய சித்தி என் அப்பாவிடம் கூற என்னை அடித்துத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். அதேநேரம் என் சித்தியின் தம்பியால் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானேன். இதிலிருந்து தப்பிக்க அந்த வயதிலேயே நான் சென்னைக்கு வந்தேன். சில இடங்களில் பணியாற்றினேன்.அந்த நேரத்தில் என் தந்தை நோய்வாய்பட்டு சென்னையில்தான் தங்கியிருந்தார். அந்த செய்தி கேள்விப்பட்டு அவரை பார்க்கப் போனேன். அவர் இரண்டு நாளில் இறந்துவிட்டார். பின்னர் என்னுடைய சித்தி எனக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டு ஒரு பெண்ணையும் பார்த்து முடிவு செய்த கையோடு திருமணப் பத்திரிகை உள்ளிட்ட எல்லா வேலைகளையும் செய்துவிட்டார். இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாம் பாழாக்கக்கூடாது என்கிற உறுதியோடு நான், அங்கிருந்து தப்பித்து மும்பைக்கு சென்று சேர்ந்தேன். அங்கு பாலியல் தொழிலாளியாக இருந்தேன். எங்களுக்கு இருந்த வாய்ப்பு ஒன்னு பிச்சை எடுக்கறது, இல்லைனா செக்ஸ் தொழில் செய்யறது. இப்படித்தான் எங்கள் நிலை இருந்தது. அந்த நிலைக்கு நானும் சென்றேன். மேலும் பணம் சம்பாதிக்கவும், நகைநட்டு சேக்கவும் இதுதான் எண்ணமாக இருந்தது.

கேள்வி : காதலை கடந்து போகாத திருநங்கையர் இருக்க முடியாது. உங்களின் வாழ்வில் நிகழ்ந்த அந்த காதல், திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணத்தை கூறுங்கள்...? 

நான் மும்பையில் இருந்த போது ராணுவத்தில் பணியாற்றும் தத்தா என்பவருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் உயிருக்குயிராக பழகத் தொடங்கினோம். அந்த சமயத்தில் அவருக்கு சென்னைக்கு பணி மாறுதல் கிடைத்தது. அதனால் நானும் அவருக்கு முன்னதாக சென்னைக்கு வந்து ஒரு குடிசை வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் வீட்டின் அருகிலேயே இன்னொரு குடிசையை வாடகைக்கு எடுத்து இன்னும் சில திருநங்கைகளை தங்க வைத்தேன். அங்கே நானும், அவர்களும் பாலியல் தொழில் செய்து வந்தோம். தத்தாவும் ஒரு மாதம் கழித்து சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுதெல்லாம் நானும், அவரும் காதலிப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டோம். வேறு எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் சட்டபடி என்னை திருமணம் செய்து கொண்டால்தான் என்னை நீங்கள் தொடலாம் என்று உறுதியாக கூறியிருந்தேன்.  

கேள்வி : உங்களின் எண்ணம் ஈடேறியதா? 

என் எண்ணத்தை ஏற்றுக் கொண்ட தத்தாவும் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பி அவரின் குடும்பத்தாரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் குடும்பத்தார் அனைவரும் என்னை பெண் என்றே நினைத்து அன்போடு அரவணைத்தனர். எங்கள் திருமணத்திற்கு இரண்டு நாள்கள் இருந்த நிலையில் அவர்களின் குடும்ப வழக்கப்படி நெற்றியில் பச்சைக்குத்திக் கொள்ளச் சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லாத நான் பச்சைக் குத்திக்கொள்ள மறுத்ததால் எனக்கும் தத்தாவுக்கும் வாக்குவாதம் வந்தது. அப்பொழுது கோபத்தில் என் குரலை கொஞ்சம் உயர்த்தி கத்தினேன். அதுவரை என்னை பெண் என்று நம்பிக் கொண்டிருந்த தத்தாவின் குடும்பத்தினர், நானொரு திருநங்கை என்ற உண்மையை தெரிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், ஒரு பொட்டைய அழைத்து வந்து திருமணம் செய்கிறாயே என்றுகூறி என்னோடும், தத்தாவோடும் சண்டை போடத்தொடங்கினர். அப்பொழுது தத்தா அவள் பெண்ணா? ஆணா? என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை அவள் பெண். அவளை நான் விரும்பிவிட்டேன். இனி அவள்தான் என் மனைவி என்று மிகவும் உறுதியாக கூறினார். அவரின் அன்பு என்னை நெகிழச் செய்தது. அதனால் அவருக்காக பச்சை குத்திக் கொண்டேன். திருமணமும் நடந்தது. 

கேள்வி : பெரிய போராட்டத்திற்குப் பிறகு உங்களின் திருமணம் முடிந்திருக்கிறது. அதன் பின்னர் எப்பொழுது சென்னை வந்தீர்கள்?

திருமணம் முடிந்து தத்தாவின் வீட்டிற்கு வந்த உடனே முதல் சோதனையாக எனக்கு மஞ்சள் காமலை வந்துவிட்டது. அந்த ஊரில் மருத்துவ வசதிகள் இல்லாததால் என் உடல் நிலை மிகமோசமானதால், சென்னையில் சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்து சென்னைக்கு வந்து சேர்ந்தோம். என் உடல் மீண்டும் பழைய ஆரோக்கியத்திற்கு திரும்பியது. பின்னர் இருவரும் ஒன்றாக சில மாதங்கள் சென்னையில் வாழ்ந்த நிலையில் அவருக்கு பணியிட மாற்றம் வந்தது. பல இடங்களுக்கு பணியிட மாற்றத்தில் சில இடங்களுக்குச் சென்ற என்னால் அவருடன் தொடர முடியவில்லை. அதனால் நான் சென்னையிலேயே இருப்பதாக முடிவுசெய்து அவர் மட்டும் சென்றார். அவர் இல்லாத காலங்களில் நான் செய்த தவறால் எனக்கு மிகப் பெரிய பரிசாக எச்ஐவி தொற்று ஏற்பட்டது.

கேள்வி : உங்கள் கணவருக்கு அதைப்பற்றி கூறியிருந்தீர்களா?

அந்த நேரத்தில் அவர் வெளிமாநிலத்தில் இருந்ததால் முதலில் நான் சொல்லவில்லை. இடைப்பட்ட காலத்தில் ஒருமுறை பத்துநாள் விடுப்பில் அவர் வந்தபொழுது எனக்கு வந்துள்ள பாதிப்பைப் பற்றி அவரிடம் வெளிப்படையாக கூறினேன். ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. மாறாக பெருந்தன்மையோடு அரவணைத் துக் கொண்டார். பயிற்சி முடிந்தபிறகு தன்னுடனே வைத்துப் பார்த்துக் கொள்வதாக சொல்லிச் சென்றவரின் இறந்த செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் இறந்தது 1991ஆம் ஆண்டு.

கேள்வி : எச்ஐவி பாதிக்கப்பட்ட பிறகு அந்த மனப்போராட்டத்தில் இருந்து மீண்டது எப்படி...? நீங்கள் மேற்கொண்ட பணிகய் என்ன...?

உண்மையில் என்னுய் தைரியத்தை வளர்த்து தன்னம்பிக்கை ஊட்டியவர் டாக்டர் உஷா ராகவன் என்பவர்தான். அப்பொழுதே நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களின் எதிர்காலத்தை எண்ணியும் என் நிலையை எண்ணியும் அழுதுகொண்டே இருந்தேன். இதை தெரிந்து கொண்ட டாக்டர் உஷா என்னைத் தேடி வீட்டிற்கே வந்துவிட்டார். 1993 வரை அவர் எனக்கு உதவினார். பின்னர் ஒரு என்ஜிஓவில் களப்பணியாளராக வேலை கிடைத்தது. அதன்பிறகு அடுத்தடுத்து என்ஜிஓக்களில் வேலை செய்து ‘ஐஎன்பி’ங்கற நிறுவனத்தில் துணைச் செயலாளராக பொறுப்போடு 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தேன். அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் எனக்கு உடன்பாடு இல்லாததால் அந்த வேலையை உதறிவிட்டு வெளியே வந்தேன்.1998 ஆம் ஆண்டு எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ‘CAN’ (கம்யூனிட்டி ஆக்ஷன் நெட்வொர்க் ) என்கிற என்ஜிஓவில் சேர்ந்து 3 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கம்யூனிட்டி மக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறச் செய்வது தொடர்பான பணியை செய்துவந்தேன். 

கேள்வி : நீங்கள் ஒரு திருநங்கை... எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்... அப்படியிருக்க வேலை பார்த்த இடங்களில் எப்படியான அனுபவம் கிடைத்தது...?

எச்ஐவியால் பாதிக்ககப்பட்டவர்களின் கூட்டமைப்பே என்னை கேவலமாக பார்த்தது. கேலி பேசினார்கள். என்னைப் பார்த்தவுடன் கைகொட்டி சிரிப்பார்கள். அப்பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வேன். இவர்களைவிட நான் எந்தவிதத்தில் குறைந்தவளாக தெரிகிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களைவிட நான்கு மடங்கு வேலைகளை பார்த்து வந்தேன். அப்படியிருக்க ஏன் நம்மை கேலி பேசுகிறார்கள் என்று மனப்போராட்டத்துடனே இருப்பேன்.

கேள்வி : எஸ்ஐபி+ நிறுவனத்தையும் எஸ்ஐபி நினைவு அறக் கட்டளையையும் எப்பொழுது எப்படி துவங்கினீர்கள்? 

டாக்டர் ஜோசப் என்பவர் நூரியம்மா நீங்கள் பல இடங்களில் வேலை செய்திருக்கிறீர்கள். உங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று எண்ணை ஊக்கப்படுத்தி தனி அமைப்பை துவங்கச் சொன்னார். அதற்கு நான் மூன்றாம் வகுப்புதான் படித்திருக்கிறேன்... என்னால் எப்படி முடியும் என்று கேட்டேன்... உங்களால் முடியும்.. தைரியமாக செய்யுங்கள்... என்றார்...அவர் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக 2001ஆம் ஆண்டு எஸ்ஐபி+ (தென்னிந்திய எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு) நிறுவனத்தை தொடங்கினோம். இதில் பல வேலைத் திட்டங்கள் கிடைத்தன. குறுகிய காலத்தில் பெருமுயற்சி எடுத்து இந்த நிறுவனத்தை வளர்த்தோம். இதற்கு துணையாய் இருந்த செல்வி, இந்திரா, பழனி ஆகியோர் எச்ஐவியால் இறந்துவிட்டனர். அவர்களின் நினைவாகவே குழந்தைகள் இல்ல அறக் கட்டளையை 2003ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறோம். 

கேள்வி : உங்களுக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப்பட்ட பலர் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், உங்களுக்கு அந்த நோள் இருப்பதற்கான அறிகுறிகூட தெரியவில்லையே... காரணம் என்ன?

எனக்குப் பின்னால் எச்ஜவியால் பாதிக்கப் பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்துவிட்டார்கள். என்னுடைய ஆரோக்கியத்திற்குக் காரணம் என்னுடைய கட்டுப்பாடும், நடவடிக்கை களும்தான். நேரத்திற்கு உணவு, தேவையான மருந்து வாழ்விடத்தை தூய்மையாக வைப்பது, அத்தோடு ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்று வாழ்வதினால்தான் நான் ஆரோக்யமாக இருக்கிறேன். 

கேள்வி : இன்றைக்கு எஸ்ஐபி இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்கிறார்கள். இந்த எண்ணம் எப்பொழுது உங்களுக்கு எழுந்தது?

2005ஆம் ஆண்டு தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டி யில் ஒரு குழந்தை கிடப்பதாக எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே என் தோழி டாக்டர் ஐஸ்வர்யாவுடன் போய் பார்த்தோம். அங்கே பிறந்து இரண்டே நாளான ஒரு குழந்தையை பாட்டில் கழுவும் ஒரு பெண்மணி வைத்துக்கொண்டு எங்களுக்காக காத்திருந்தார். அவரிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வந்தோம். அந்த குழந்தைக்கு இப்பொழுது 11வயதாகிறது. அவளால்தான் இந்த இல்லமும் தொடங்கப்பட்டது. ஆக, எங்கள் இல்லத்துக்கும் அதே 11வயதுதான். 

கேள்வி : மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த நீங்கள் நிறைய நாடுகளுக்கு பயணம் போய்வந்ததாக கேள்விப்பட்டோம்? என்ன காரணங்களுக்கா அங்கே பயணம் போனீர்கள்? 

இதுவரை 24 நாடுகளுக்கு போய் வந்திருக்கிறேன். முதல் நாடு ஆஸ்திரேலியா. எல்லா நாடுகளிலும் எச்ஐவி குறித்த கருத்தரங்கில் பேச்சாளராக கலந்து கொண்டேன். மொழி எனக்கு ஒரு பிரச்சனையே கிடையாது. எப்படி என்றால், ஆங்கில உச்சரிப்புகளை தமிழில் எழுதி படித்துவிட்டு பவர்பாயிண்ட் மூலம் என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவேன். இதற்கு என்னுடைய பணியாளர்கள் நன்கு உதவி செய்வார்கய். மலேசியாவைப் பொறுத்தவரை கிறிஸ்துவ என்ஜிஓ மூலமாக பைபிள் படிப்பிற்காக சென்றேன். எங்கேயும் நான் பயந்து நின்றது கிடையாது. 

கேள்வி : உங்களால் மறக்கமுடியாத சம்பவம்எது? 

1998ஆம் ஆண்டு தமிழ்நாடு அரவானிகள் சங்கத்தின் துவக்கவிழாவிற்கு போயிருந்தேன். அங்கு வந்திருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் என்னுடைய பேட்டிஎடுத்து வெளியிட்டிருந்தார். அதில் நான் எச்ஐவியால் பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை கூறியிருந்தேன். அதை படித்த மற்ற திருநங்கைகள், என்னால் அவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாக கூறி என்னை கொளுத்த வேண்டும் என்று 10லிட்டர் பெட்ரோலுடன் என் வீட்டிற்கு வந்துவிட்டனர். நான் அதை கண்டு அஞ்சாமல் அவர்களுக்கு உண்மை நிலையை புரிய வைத்தேன். அதனால் அந்த பிரச்சனை ஓய்ந்தது. என்றாலும் அந்தப் பிரச்சனை இன்றும் என் மனதில் உள்ளது. 

கேள்வி : உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித் திருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்? 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திருநங்கைகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றுதான் சொல்வேன். குடும்பத்தார் கூட அங்கீகரிக்காமல் வெறுத்து ஒதுக்கப்படும் மாற்றுப் பாலினத்தவருக்கு இந்த தீர்ப்பு ஒரு அருமருந்து. தமிழக அரசு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திருநங்கைகளுக்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதுபோல் எல்லா இடங்களிலும் இந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும். 

கேள்வி : எங்களை சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற திருநங்கைகளின் குற்றச் சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்? 

சமூகம் அங்கீகரிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இப்பொழுது சமூகம் எவ்வளவோ மாறிவருகிறது. மேலும் மேலும் சமூகத்தை குற்றம் சொல்லாமல் சமூகத்தோடு ஒத்து வாழவேண்டும். நம்முடைய பிரச்சனைகளை மட்டும் பேசிக்கொண்டிருக் காமல் சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளிலும் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் அங்கீகாரம் முழுமையாக கிடைக்கும். 

கேள்வி : திருநங்கைகள் மாற்றிக்கொள்ள வேண்டியவை எவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 

தாங்கள் சம்பாதிப்பதில் பெரும்பகுதியை தங்களை அழகுபடுத்திக் கொள்ளவும், ஆடம்பரமாக வாழவுமே சில திருநங்கைகள் செலவழிக்கின்றனர். இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு என்பதே பல திருநங்கைகளுக்கு இல்லாமல் இருக்கிறது. தாங்கள் சம்பாதிப்பதை சேமிக்க பழக வேண்டும். அதேபோல் குறைந்த ஊதியம் என்றாலும் சுயமரியாதைகெடாத வேலை கிடைத்தால் தயங்காமல் செய்ய வேண்டும். காதலுக்கு அடிமையாகாமல் இயல்பாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அதுவே நான் விரும்பும் மாற்றம். 

கேள்வி : உங்களின் இலக்கு என்ன? 

நான் மறைந்தாலும் இந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மை செய்திருக்கவேண்டும். அப்படியான ஒரு பணியை என் வாழ்நாளுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. எங்களின் குழந்தைகள் இல்லத்திற்கு என்று சொந்தமாக இடமோ, கட்டடமோ கிடையாது. அதனால் வாடகை வீட்டில்தான் இருக்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். அந்த எஸ்ஐபி இல்லத்திற்கு என்று சொந்தமான கட்டடத்தை கட்டுவதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம். அந்த பணியை வெகுவிரைவில் முடிக்க வேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய இலக்கு. அதற்கான முயற்சிகள் நல் இதயம் படைத்தவர்களின் உதவியோடும், ஆதரவோடும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் எங்கள் குழந்தைகளுக்கான இல்லம் சொந்த கட்டடத்தில் இயங்கும். 

நேர்முகம் - சகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக