திங்கள், 19 நவம்பர், 2018

நாங்கள் வேண்டுவது உரிமைகளே...!

 -திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடல்

அன்மையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவுக்குப் புதிய விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ‘மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பால் புதுமையர்’ (எல்ஜிபிடிகியூ) சமூகத்துக்கு மட்டுமல்லாமல், நமது ஜனநாயகத்துக்கும் புதிய வழியைக் காட்டியிருக்கிறது. மாற்றுப் பாலினரிடையே மகிழ்ச்சியை பெற்றிருக்கும் அந்த தீர்ப்போடு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘திருநங்கைகள் மசோதா’ குறித்தும் திருநங்கைகளுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தலாம் என்று முடிவு செய்ததோம். அதனால் சென்னையில் இயங்கிவரும் ‘திருநங்கைகள் உரிமைச் சங்க’த்தின் தலைவர் ஜீவா மற்றும் திருநங்கைகள் மானு, சந்தனா, மோனி, நிர்மலா ஆகியோருடன் கலந்துரையாடினோம். திருநங்கைகள் போன்ற மாற்றுப் பாலினத்தவர் அனுபவிக்கும் வேதனைகள், வலிகள் என வழக்கமான உரையாடலாக இல்லாமல் அவர்கள் பொது சமூகத்திடமும், அரசாங்கத்திடம் கேட்பது என்ன? அவர்களுக்கான உரிமைகள் பற்றி அவர்கள் சொல்ல விரும்புவது என்ன? போன்ற விரிவான தளத்திற்குள் உரையாடலை கொண்டு சென்றோம். 
கேள்வி : இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
மானு : LGBT மக்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான தீர்ப்பு. சமூகத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பயந்து ஒதுங்கியிருந்தவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. 
ஜீவா : உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவை முழுமையாக நீக்கவில்லை. மாறாக நிறுத்தி வைத்துள்ளது. முன்னர் இந்த சட்டத்தின் மூலம் எங்கள் மக்களை கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வந்தது. அப்படி இனி செய்ய முடியாது. திருநங்கைகள் தான் தேர்ந்தெடுத்த ஆணை திருமணம் செய்வதில் இருந்த தடை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தைச் சொல்லி எங்களை மிரட்டவோ கைது செய்யவோ முடியாது. ஏனெனில் ஏற்கனவே 2014 ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் எங்களை மூன்றாம் பாலினமாக சட்டபூர்வ அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. ஆக எங்களுக்கு இது மகிழ்ச்சியான தீர்ப்புதான்.  
  கேள்வி : நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் தொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டது.  அம்மசோதாவில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?
மானு : 2012ம் ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்கின் விளைவாக 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் மூன்றாம் பாலினம் என்கிற அங்கீகாரம் கொடுத்தது. மேலும் எங்களுக்கான உரிமைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆறு மாத காலத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகி நான்கு ஆண்டுகளாகியும் இன்னும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு திருநங்கைகளுக்காக மசோதா ஒன்றை பிறப்பித்தது. ஆனால் அது முற்றிலும் தவறான ஒரு மசோதா. பாலின அடையாளம், வாழ்வாதார உரிமை என அனைத்துமே சரியான புரிதலின்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினோம். எங்களின் தேவை என்பது இடஒதுக்கீடு தான். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு. போதுமான விழிப்புணர்வும், இடஒதுக்கீடும் இல்லாமல் எங்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வாய்ப்பேயில்லை.
ஜீவா : இப்போதிருக்கும் பா.ஜ.க அரசு என்ன செய்ததென்றால், திருநங்கைகளை பற்றின சரியான புரிதலே இல்லாமல் சட்டம் இயற்றியது. யார் திருநங்கை என்பதிலேயே சரியான வரையறை இல்லை. மேலும் திருநங்கைகளின் வாழ்வாதார தொழிலே கடை கேட்பு தான். அதை செய்யக் கூடாது என்கிறது இந்த அரசு. ஆனால் மாற்று திட்டமும் குறிப்பிடவில்லை. இருக்கிற தொழிலையும் செய்யக் கூடாது, மாற்று தொழிலும் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது. இதை எதிர்த்து தான் தமிழகத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் வள்ளுவர் கோட்டத்தில் இணைந்து போராட்டம் நடத்தினோம். திருச்சி சிவா ஒரு தனி நபர் மசோதாவை கொண்டு வந்தார். அதில் எங்களைப் பற்றிய தெளிவான வரையறையும் எங்களுக்கு தேவையான திட்டங்களும் இருந்தது. நாங்கள் பெற்றோரோடு இருக்க வேண்டும், கல்வி வசதி, இட ஒதுக்கீடு என அனைத்து சிறப்பம்சங்களும் அதில் இருந்தது. ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பா.ஜ.க அரசின் சட்டத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.
ஸ்டெல்லா : இந்த மசோதா குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவமனைகளில் எங்களுக்கு எப்படி மருத்துவம் பார்ப்பது என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. எங்களை ஒதுக்கும் நிலை இன்றும் தொடர்கிறது. திருநங்கைகள் குறித்த அடிப்படை புரிதல் அவசியம். எங்களுக்கும் மருத்துவ காப்பீடு போன்ற வசதிகள் வேண்டும்.
சந்தனா : இப்போதிருக்கும் சூழ்நிலையில் போதிய பாதுகாப்பற்ற இடங்களில் தான் வாழ்கிறோம். அதிலும் நாங்கள் திருநங்கைகள் என்பதால் கூடுதல் வாடகை பெறப்படுகிறது. இந்த நிலையில் பொருளாதாரத்திற்கு நாங்கள் என்ன செய்வோம்? பிச்சை எடுப்பதும், பாலியல் தொழிலையும் தவிர வேறு வழி இல்லையே !
கேள்வி : திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லை என்கிறீர்கள், திருநங்கைகள் பற்றிய சரியான வரையறை இல்லை என்கிறீர்கள். யார் திருநங்கை?
மோனி : அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் திருநங்கை. அறுவை சிகிச்சை செய்யாமல், பெண்ணாக உணர்ந்த நிலையில் இருப்பது தொடக்க நிலை. அறுவை சிகிச்சை செய்யாதவர்கள் திருநங்கைகள் இல்லை என ஏன் சொல்கிறேன் என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாதவர்கள், ஒரு கட்டத்திற்கு பிறகு தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வேறு வேலைக்கு சென்றுவிட முடியும். ஆனால் எங்களால் அப்படி முடியாது. நான் மூன்று அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன். என்னால் கல் உடைக்கவோ, மூட்டைத் தூக்கவோ இயலாது.
ஜீவா : திருநங்கைகள் பற்றி தவறான வரையறை எவ்வாறு வந்ததென்றால், தில்லியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் சமூகநீதி அமைச்சகத்திடம் சென்று திருநங்கைகள் பற்றிய வரையறையை தருகிறார்கள். திருநங்கைகள் நல வாரியம் முதன்முதலில் தமிழகத்தில் தான் உருவானது. தமிழகம் தான் முதன்முதலில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு தந்தது. ஆனால் பிரச்சினை என்னவெனில் இங்கிருந்து தில்லி சென்று எங்களின் அடையாளங்களையும் உரிமைகளையும் பற்றி பேசுவதில் உள்ள மொழி சிக்கல் தான். 
கேள்வி : இதற்கு தமிழக அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
ஜீவா : நான் வாரிய உறுப்பினராக இருக்கும் பொழுது, அமைச்சர் "உங்கள் மக்களுக்கு என்னென்ன தேவை?" என்று எங்களை கேட்பார். நாங்கள் மொத்தம் எட்டு உறுப்பினர்கள்.ஒவ்வொருவரும் ஆறு மாவட்டங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். அதன் அடிப்படையில் எங்களின் பிரச்சினைகளை அமைச்சரிடம் முன்வைப்போம். அந்தந்த துறை அதிகாரிகளிடம் அது தொடர்பான உத்தரவுகளை அமைச்சர் கொடுப்பார். அது எங்கள் உரிமைகளை பெறுவதற்கான வாய்ப்பாக இருந்தது. திருச்சி சிவா, எங்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதனால் தான் இன்று அனைத்து திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டை கிடைத்துள்ளது. திருநங்கைகள் நல வாரியம் மூலமாகவும் பல உதவிகள் கிடைத்தன. 
கேள்வி : தற்பொழுது திருநங்கைகளுக்குப் போராடும் குணம் குறைந்து விட்டதா?
மானு : போராடித்தான் இத்தனை உரிமைகளையும் பெற்றோம். எந்தவொன்றும் எங்களுக்கு எளிமையாக கிடைக்கவில்லை.
ஜீவா : பிரித்திகா யாசினி கூட தேர்வெழுதியதும் காவல்துறையில் பணிவாய்ப்பு கிடைக்கவில்லை. திருநங்கை என்பதற்காக தொடக்கத்தில் அவர் நிராகரிக்கப்பட்டார். பின் நீதிமன்றத்தை அணுகி, நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் அவர் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார். ஆதலால் போராட்டம் இல்லாமல் எங்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. 

கேள்வி : திருநங்கைகளின் குறித்த கணக்கெடுப்பு தரவுகள் உங்களிடம் இருக்கிறதா? இல்லையென்றால் அதற்கு என்ன தீர்வு?
ஜீவா : கணக்கெடுப்பு பொறுத்தவரையில் 2007 - 2011 காலகட்டங்களில் தேசிய அளவிலான கணக்கெடுப்பின் போது, திருநங்கைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் எங்களை 'ஆண்' என்று தான் பதிவு செய்வோம் என்றார்கள். மாற்றுப்பாலினம் என்ற பிரிவு இல்லை என்றார்கள். நாங்கள் எங்களைப் பெண்ணாக உணர்கிறோம். ஆகையால் 'பெண்' என்று தான் பதிவு செய்ய முடிந்தது. எங்கள் எண்ணிக்கை முழுவதும் பெண்களின் எண்ணிக்கையில் சேர்ந்துவிட்டது. என்னுடைய வாக்காளர் அட்டையில் கூட பெண் என்று தான் குறிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அரசு ஒரு முகாம் நடத்தி, அதில் திருநங்கைகள் தங்கள் அடையாள அட்டைகளில் பாலின மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

கேள்வி : உங்களுக்கான அரசுசாரா அமைப்புகள் பல இருக்கின்றன. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள திருநங்கைகள் பற்றி உறுதியான தரவுகள் இல்லையா?
ஜீவா : அப்படி புள்ளிவிவரங்களோடு சொல்ல முடியாது. 1994 காலகட்டத்திலேயே திருநங்கைகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பதிவாகியிருந்தது. இப்பொழுது அதைவிட அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்காது. உறுதியான தரவுகள் எங்களுக்குக் கிடைத்தால் தான் சரியான எண்ணிக்கையைச் சொல்ல முடியும்.
மானு : இதற்கு என்ன தீர்வு என்றால், அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது  ஆண், பெண் பிரிவுகளோடு மாற்றுப்பாலினத்தவர் என்ற தனிப்பிரிவும் இருக்க வேண்டும். 
ஸ்டெல்லா எல்லா விண்ணப்ப படிவங்களிலும் மாற்றுப்பாலினத்தவர் என்ற பிரிவு இருப்பதில்லை. பெரும்பாலும் ஆண், பெண் என்ற பிரிவு மட்டுமே உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேருந்துகளில், தொடர் வண்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இருக்கைகள் இருப்பது போன்று எங்களுக்கும் தனி இருக்கைகள் வேண்டும். 
கேள்வி : இந்த சூழலில் சமூக அளவில் என்னென்ன மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறீர்கள்? உங்கள் திருநங்கைகள் சமூகத்திற்குள்ளேயே என்னென்ன மாற்றங்கள் நிகழ வேண்டும்?
மோனி : இன்றைய சமூகம் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஓரளவிற்கு எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் 'கிuஸீtஹ்' என்று அழைக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கின்றது. கேலிப்பேச்சுகள் இன்றும் தொடர்ந்தாலும், முன்பிருந்த அவல நிலை இப்போது இல்லை. வேலைவாய்ப்பு வசதி மட்டும் அதிகப்படுத்தினால் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும். 
நிர்மலா : திரைப்படங்களில் எங்களை கேலியாக சித்தரிக்கிறார்கள். நாங்கள் செய்யும் தவறுகளை எல்லாம் சொல்கிறீர்கள், ஆனால் நாங்கள் செய்யும் நன்மைகளை மட்டும் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?
சந்தனா : ஆண்களில் சிலர் கொலை செய்கிறார்கள், அதற்காக எல்லா ஆண்களையும் கொலை காரர்கள் என்று சொல்வீர்களா? சில பெண்கள் தவறு செய்கிறார்கள், அதற்காக எல்லா பெண்களின் மீதும் குற்றம் சுமத்துவதில்லையே? ஆனால் ஏதோ ஒரு திருநங்கை தவறு செய்தால் மட்டும் ஏன் ஒட்டுமொத்த திருநங்கைகளையும் குற்றவாளிகளாக்குகிறீர்கள்? முதலில் இந்த மனநிலை மாறவேண்டு.

கேள்வி : வேலைவாய்ப்புகளை திருநங்கைகள் தட்டிக் கழிப்பதாக ஒரு கருத்து உள்ளதே?
சந்தனா : அப்படி எதுவும் இல்லை. நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். என் திறமைக்கேற்ற எந்த வேலையையும் செய்ய நான் தயார். ஆனால் தரமாட்டார்கள். "2000 ஆண்களுக்கு இடையில் நீ எவ்வாறு பணி செய்ய முடியும்?" என்று கேட்கிறார்கள். வாய்ப்பேத் தராமல், நாங்கள் எந்த வேலையையும் செய்ய மாட்டோம் என்று சொல்வது அபத்தம்.
மானு : அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலைவாய்ப்புத் தர வேண்டும். அதற்கான சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். அப்பொழுது தான் இதுபோன்ற தவறான கருத்துகள் நீங்கும். குறைவான ஊதியத்தை தந்து, அதிக உழைப்பை சுரண்டுகிறார்கள். இதில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
நிர்மலா : எங்களை போன்ற திருநங்கைகள், சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியவர்கள். கல்லூரிக் காலங்களில் வெளிவந்தவர்களும் இருக்கிறார்கள். இதனால் எங்கள் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் என எதுவும் எங்களிடம் இருப்பதில்லை. நாங்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதற்கும், உடலுழைப்பால் சுரண்டப்படுவதற்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.
ஸ்டெல்லா : இப்பொழுது ஒரு நிறுவனத்தில் ஒரு ஆண் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாக பெறுகிறான் என்றால், அதே வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு ஏழாயிரம் ரூபாய் தருகிறார்கள். ஒரு திருநங்கைக்கு நான்காயிரம் ரூபாய் தான் தருகிறார்கள். ஏன் இந்த வேறுபாடு? இந்த வருமானத்தை வைத்து கொண்டு நாங்கள் எப்படி வாழ்வது?

கேள்வி : அடுத்த தலைமுறை திருநங்கைகளை, இப்போதிருக்கும் சமூக அவலங்களிலிருந்து விலக என்ன செய்கிறீர்கள்?
நிர்மலா : நான் திருநங்கையாக கடை கேட்டு கொண்டிருந்தவள்தான். பிறகு, நான் படித்திருக்கிறேன் என்பதை அறிந்து, ஒரு திருநங்கை அமைப்பில் கள ஆய்வாளராக பணியமர்த்திருக்கிறார்கள். 
ஜீவா : முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, திருநங்கைகளின் பாரம்பரிய தொழில் என்பது கடைகேட்பு தான். அப்பொழுது அதற்கான வாய்ப்பு மட்டுமே இருந்தது. இப்பொழுது தான் ஓரளவிற்கு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆகையால் எங்களுக்கு அடுத்து வரும் திருநங்கைகளுக்குப் பல்வேறு வாய்ப்புகளை நோக்கி வழிகாட்டுகிறோம். இந்த நிலையை இன்னும் சீராக்க, அரசு மட்டும் போதாது.  தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்ற திருநங்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீதான அனுதாபமோ, இரக்கமோ எங்களுக்கு தேவையில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் முதுகலை படிப்பை முடித்திருந்தால் வேலை கிடைக்கும் வரை அரசாங்கமே அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. அது போன்று நம் நாட்டிலும் வழங்க வேண்டும். 

கேள்வி : உங்களின் உரிமைக்காக முகம் தெரியா நபர்களிடம் இத்தனைப் போராட்டங்களையும் வலிகளையும் வேதனைகளையும் தாங்கும் நீங்கள், உங்கள் பெற்றோரிடம் உங்கள் நிலையை புரிய வைத்திருந்தால், வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் இருந்திருக்காதே?
ஸ்டெல்லா : உறவினர்களின் இழிச்சொல்லுக்கு பயந்தே நிறைய பெற்றோர்கள் எங்களை ஒதுக்குகிறார்கள். நாங்களும் பெற்றோருடன் இருக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், பெற்றோர்களை சிரமத்திற்குள்ளாக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வெளியேறுகிறோம். 

கேள்வி : இறுதியாக இதற்கெல்லாம் என்ன தீர்வு?
மானு : அரசு எங்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுத் தரவேண்டும். ஊடகங்கள் எங்களைப் பற்றிய சரியான புரிதலோடு செய்திகள் வெளியிட வேண்டும். திருநங்கை ‘தாரா’ மரணத்தில் உள்ள மர்மம் பற்றி எந்த ஊடகங்களும் கவலைப்படவில்லை. இதே ஒரு பெண்ணோ, ஆணோ இப்படி இறந்திருந்தால் ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் இருக்குமா? 
நிர்மலா : நான் டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஒரு தனியார் அமைப்பில் பணிபுரிகிறேன். என்னைப் போன்றோரை பொது சமூகத்திற்கு அறிகமுகப்படுத்தினால், புதிய வேலை வாய்ப்பும், என் குடும்பத்தினருடன் இணையும் வாய்ப்பும் கிடைக்கும்.
மோனி : எங்களை போன்றோரை பற்றியும் நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டால் பொது மக்களுக்கு எங்களை பற்றிய விழிப்புணர்வு வரும். தகுதியான திருநங்கைகளைப் பற்றிய தகவல்களை வெளியிட்டு, அவர்களுக்கு கல்வி உதவியோ, வேலைவாய்ப்போ பெற்று தந்தால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
சந்தனா : மகளிர் தினம் பற்றி மட்டும், அந்த வாரம் முழுவதும் விவாதங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாம் வரும். ஆனால் திருநங்கைகள் தினம், ஒரு மணி நேர நிகழ்ச்சியோடு முடிந்துவிடும். திருநங்கைகள் தினம் என்ற ஒன்று இருப்பதே பலருக்கு தெரியாது. நாங்களும் படித்திருக்கிறோம், எங்களுக்கும் வேலைவாய்ப்பு தந்தால் சிறப்பாக செயல்படுவோம்.

நேர்முகம் -சகா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக